உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 227

என்ன இந்தப் பெண் அனாயாசமாய்ச் சத்தியம் வைக்கிறது! அவன் உள்ளங்கைக்கீழ் அவள் உதடுகள் துடித்தன.

உதடுகள் அல்ல.

இதயம்தானோ?

“என்னையேற்க என்னிடம் என்ன கண்டேளாே அறியேன். ஆனால் கேட்கமாட்டேன்.”

“ஏன்?”

“தெரிஞ்சுக்கப் பயம்.”

“என்ன பயம்?”

“நான் சொல்லிக் கொடுத்து என் சந்தேகம் உங்களுக்கே வந்துவிட்டால்? அதனால் நீங்களே மாறிவிட்டால்?”

தூலத்தில் பல்லி “டக் டக்”கென்றது.

அவள் காட்டிய பயம் அவனைக் கவ்வுகையில், சுடர் காட்டும் நிழலில் அவன் கழுத்து மறு இன்னும் கறுத்தது. அவளை அணைத்துக் கொண்டான். கை நிறைந்திருக்கிறாள். இந்நிறைவே தான், கள்ளம் கபடமற்ற இந்த நெஞ்சு வெளிதான், என்னையு மறியாமல், இவளை வரிக்க என்னை இயக்கிற்றோ?

பெண் பார்க்கப் போனவிடத்தில் என்பிள்ளைக்கு ஏன் இப்படி வாயடைச்சுப் போச்சோ தெரியல்லியே! கொண்டு வந்து வெச்ச சொஜ்ஜி பஜ்ஜியிலேயே ஏதாவது வெச்சுட்டாளா? ஒரு பாட்டா, குரலா, படிப்பா, பிடிலா ஒண்ணு உண்டா? தோல் வழுக்கிட்டுதுன்னு சொல்லக்கூட வழியில்லையே, நம் வாசல் கூட்டி சின்னம்மாவே இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/237&oldid=1026627" இலிருந்து மீள்விக்கப்பட்டது