பக்கம்:அஞ்சலி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 235

ஏகா முனகியெழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கினாள்.

“நான் தூங்கவேயில்லை.”

“பேஷ்! சொன்னயே, இதுதான் சிகரம்!”

“நிஜம்மா! எனக்குத் தூங்கின மாதிரியேயில்லை. என் கண்ணைப் பாருங்கள்.”

மிளகாயை வைத்து இழைத்தாற்போல் கண்கள் ஜெவ ஜெவென எரிந்தன.

“கன்னாபின்னான்னு என்னவோ கனா. எங்கேயோ கோவில் மணியோசை கேட்கிறாப்போல, கூடவே அழு குரலும் இழையறாப்போல, நீங்கள் ஏதேனும் தூக்கத்தில் அழுதேளா?”

“நானா? எதுக்கு, உன்னைக் கட்டிக்கொண்டதற்கா?”

“தெரியாது.”

“அழுதால் விடுதலை தந்துவிடுவையா?”

(மாலை வேளை கடலோரம் விளக்குகள் ஏற்றிக் கொள்வதுபோல் என்ன விழி ஜாலக்! கழுத்தில் சரடு காணோம். கட்டவே யில்லையோ, கழற்றிவிட்டாளோ! ஒருநாள் ஒரே அலங்காரம்—பந்துப் பூ, கழுத்து நிறைய சரம் சரமா, கை நிறைய அடுக்கடுக்காய், அயனும் பகட்டும் தெரியாமல் தடபுடல். மறுநாள் நெற்றித் திலகம்கூட இல்லை. மொழு மொழுகிவன்று அந்த வெறிச்சில்கூட ஒரு பாணி, ஒரு கவர்ச்சி, ஒரு அழைப்பு இல்லை? ஏய், நேற்று நீ இறங்கிப்போகையில் உன் முதுகின் வாய்க்காலில் உன் ரவிக்கையின் பிடிப்பை நான் கண்டு கலங்கணும்னுதானே, முதுகைக் காட்டித் தோளில் தலைப்பை சரிய விட்டுக்கொண்டு போனே, எனக்குத் தெரியாதோ?)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/245&oldid=1033526" இலிருந்து மீள்விக்கப்பட்டது