பக்கம்:அஞ்சலி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 237

படுத்தால் எப்படியிருக்குமோ? இன்றைக்கென்று வேலை தலைக்குமேல் நிற்கிறது. ஏதோ கல்யாணம் என்று வேலைக்காரி நேற்றே பாக்கு வெச்சுட்டா. அவர் அழுக்கு மண்டிக்கிடக்கு. வண்ணான்துறை திறந்தாதனும், ஆடி வெள்ளிக்கிழமை வேறே மாவிளக்கோடு கொழுக் கட்டையாம். திகைப்பாயிருக்கு. இதுவரை காரியத்தைக் கணக்குப் பண்ணத் தோணியதேயில்லை. வலதுகண் அதிகமாய்ப் படபடக்கிறதோ? என்ன காத்திண்டிருக்கோ தெரியவில்லையே?

முகத்தை அலம்பியும் தூக்க மயக்கம் தெளியவில்லை. தூக்கம்கூட இல்லை. ஒரு தினுசான அழுத்தல்; அதே சமயத்தில் கால் பூமியில் பதியாதொரு மிதப்பு. குஞ்சு, தான் பொரியுந்தருணம் தன்மேல் உணரும் முட்டை ஒட்டின் நெருக்கம். சீட்டின் கலைப்பு. கிணற்றில் தாம்பில் தோண்டி தொங்கும் அந்தரம்.

எங்கு இருக்கிறோம், போகிறோம்?

உடல் தள்ளிற்று.

கும்மட்டியில் கறுப்புப் பூனைக்குட்டி படுத்திருக்கா? “சூ—!” சே, கரிக்கட்டிதான். நேற்றே போட்டு வெச்சது—போட்டு வெச்சேனா? போட்டு வெச்ச ஞாபகமில்லையே! என்னவோ—அதென்ன கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடறமாதிரி அப்படியிருக்கு?

(ஈரம் படாதிருக்க) தகர டப்பியிலிருந்து தீப்பெட்டியை

எடுத்து—

திறந்து

கிழிக்க—

ஓங்கி—

சுடர் சீறிக் குதித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/247&oldid=1026717" இலிருந்து மீள்விக்கப்பட்டது