பக்கம்:அஞ்சலி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 245

“ஐயனாரே, கமலசாஸ்தா! என் புகுந்த வீட்டுக் குல தெய்வங்களா!! என்னைக் காப்பாற்றுங்கோ, காப்பாற்—”

—!

“யாரது?”

நான்தான்.

“நான்தான்னா யார்?”

மணிநாக்கு ஒன்று எங்கோ ஓசையில் துடித்து வீழ்ந்தது. தட்டிலாது சுடர் ஒன்று அஞ்சலியில் அவளை வட்டமிட்டு அந்தரத்தில் நீந்திற்று. கம்மென்று அகில் மணம் புகையின்றிக் கமழ்ந்தது.

“நீ யார்?”

புரியவில்லையா?

“புரியவில்லை. எனக்குப் புரிய வேண்டாம். என்னை எங்கு அழைத்து வந்திருக்கிறாய்” என்னிடத்தில் கொண்டு போய் விட்டுவிடு.”

ஏகா, உன்னை நான் அபகரிக்கவில்லை. நீ உன்னிடத்தில்தான் இருக்கிறாய். நான்தான் உன்னிடம் தேடி வந்திருக்கிறேன்.

“இல்லை, என்னை என்னிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடு.”

ஏகா, முட்டையுடைந்து குஞ்சு பொரிந்தபின் உடைந்த முட்டையை என்னால் மறுபடி ஒட்ட வைக்க முடியாது.

ஏகா, நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டே அந்தரம் புகுந்துவிட்டாய்.

“பாபி, உன் எண்ணத்துக்கு நான் மசியமாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/255&oldid=1033533" இலிருந்து மீள்விக்கப்பட்டது