பக்கம்:அஞ்சலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 லா. ச. ராமாமிருதம்

இயங்குவதால், உன்னோடும் நான் ஒன்றாகிவிடுகிறேன். இந்த நிலையை ஏன் மறுபடியும் இரண்டாக்குகிறாய்? ஏன் என்னை இப்படித் துண்டிக்கிறாய்?”

“ஏன் இந்தமாதிரியெல்லாம் புரியாதபடிப் பேசி, என்னை வேதனைப் படுத்தறேள்? நான் என்ன, உலகத்தில் இல்லாததாய் என்ன சொல்றேன்?”

“உலகத்தில் இருக்கிறதெல்லாமே சரியாய் நடக்கிறபடி நடந்துகொண்டிருக்கின்றதென்று உனக்குள் எண்ணமா?”

தரங்கிணி திகைப்புற்றவளாய்த் தன் எதிர்ே இருளிலும் பளபளக்கும் வெள்ளைத் தகட்டை நோக்கினாள்

“எனக்கென்ன தெரியும்?”

“உனக்கு இந்த ஆறு ஒன்றுதான் தெரியும். சாக்கடைகளும் ஜலதாரைகளும் நீ அறிவாயோ? நான் அறிவேன்.”

“இந்தப் பாஷையை விட்டுப் பளிச்சுன்னு உங்களால் சொல்ல முடியாதா?’’

“எனக்குத் தோன்றுவதை விளக்க எனக்கு இந்தப் பாஷையை விடப் பளிச்சென்று வேறு கிடையாது. இதெல்லாம் நாம் விட்டுடுவோம். ஒன்றே ஒன்று மாத்திரம் நீ என்னிடம் சொல். சினிமாவில் கேட்கிற மாதிரி கேட்கிறேன். ஆனால், என்னால் கேட்காமலும் இருக்க முடியவில்லை; ஒரே வார்த்தையில் சொல்லிவிடு. உனக்கு என்மேல் ஆசையில்லையா? என்னை நீ விரும்ப வில்லையா?”

“ஏன் அப்படிக் கேக்கறேள்? என்னை நீங்கள் அப்படிக் கேக்கறப்போ எனக்கு மனசு ஏதோ இம்சை பண்றது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/26&oldid=1033387" இலிருந்து மீள்விக்கப்பட்டது