250 லா ச. ராமாமிருதம்
அவர் விழிகள் துளும்பின. “நான்—நான்—”
“டாக்டர்! விளக்கம் ஏதும் எனக்கு வேண்டாம். உங்கள் மனைவி வெள்ளை, உங்களுக்கே அது தெரியும். ஆனால் வரட்டுக் கெளரவத்தில் வருடங்களை அளந்து கொண்டு நீங்கள் குவிக்கும் சுமையில் நசுங்கிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அளக்கும் படியில் ஒரு தரமேனும் அட்சதையிருக்கட்டும்; பிடி நெல்தான் வயலாய் விருத்தியாகிறது. வெறுங்கையின் வீச்சில் விதை விழுந்துவிடாது. ஆகையால் யார் யாரை மன்னிக்கிறீர்களோ, ஒன்று சேருங்கள். அதுதான் நியாயம், நியதி, முக்கியம்.”
“Oh, My God!”
“டாக்டர், உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவர்க்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள். என் கணவரை எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்த்த வீட்டு விநோதாவுடன் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். பாவம்! அவர் முகம் குங்குமமாய்க் கொதிக்கிறது பாருங்கள். ஒருவரை யொருவர் ஏமாற்றி, ஒருவரை யொருவர் மீன் பிடிக்கிறார்கள்—”
You have given your wife a shock. என்ன நடந்தது?”
“டாக்டர், நானே சொல்கிறேன், செயலளவில் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை, எண்ணமும் செயலே என்பது தவிர. ஆண்டவனின் புன்னகை இன்னதென்று புரியவைக்க உதாரணம் காட்டினேன், அவ்வளவுதான்.”
அவள் கண்கள் மூடின. நெற்றியில் வேர்வை முத்திட்டது.
“டாக்டர், என் மனைவிக்கு உடம்பு என்ன?” அவன் குரல் நடுங்கிற்று.