252 லா. ச. ராமாமிருதம்
ஜனிப்பின் திகப்ரமையினின்றே இழுத்த பாகு போன்ற தாபம், உள் நினைவில் தோய்ந்ததும், திரவம் தன்னை யேந்தும் ஏனத்தின் வடிவையடைவதுபோல், இத்தனை வேதனைகளும் ஒருங்கே சேர்ந்து உருப்பெற்றதோர் அலை வீங்கிய திடீர் வேகத்தில், உடல் அதிரப் பெருங்கேவல் தொண்டையிலிருந்து கிளம்பி, ஏகா திடுக்கென விழித்துக் கொண்டாள்.
—!
“ஐயோ, நீயா?”.
ஏகா, நான் எங்கும் போகவில்லை.
“ஏன்? ஏன்?? ஏன்?? உனக்கு வேறு இடம் இல்லையா? என் தலையில்தான் உன் சீட்டு விழணுமா?”
ஏகா, சீட்டேது? குலுக்கல் ஏது? இது விதி, இது உன் வேளை. இவ்வேளையை, இந்த ஜன்மத்தின் பிறப்பு இறப்பின் இடைவேளை கொண்டே அளவிடுதல் அல்ல. இது நேர, அந்தரத்தின் அடைகாப்பில் எத்தனை ஆயிரம் ஆயிரம் வருடங்கள் இருந்தாயோ? நானே அறியேன், நானும் அவ்வழிதான்.
“நான் ஒரு பாவத்தையறியேன், என் பாட்டுக்கு இருந்தேன். கடவுள் என்று நின்று நினைக்க என் வேலையும் ஜோலியும் எனக்கு நேரமுமில்லை ஹேதுவுமில்லை. காலையும் மாலையும் விளக்கை யேற்றி, நெற்றியை ஒரு தரம் தரையில் முட்டிக்கும்போதுகூட:
‘அடுப்பில் சாதம் மிளிந்து வரதே!
பால் பொங்கிடுத்தோ?
குழம்புத்தான் வெந்ததோ?
அவருக்கு டிபன் சூடாயிருக்கோ?’
இதுதான் கவலை. உன்னை நினைத்தேனா? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறாய்?"