பக்கம்:அஞ்சலி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254 லா. ச. ராமாமிருதம்

“சரியாப்போச்சு. அவன் என்னிடம் அடைக்கலம் கேட்கிறான்; நான் அவனுக்கே தாய் ஆகிவிட்டேன். தாய் என்று சொன்னதுமே என் மார்பு சமுத்திரமா பொங்கிப் போச்சு. தொட்டுப்பாருங்கோ. என் ரவிக்கை தெப்பமா போச்சு. அம்மா என்னடான்னா என் வயிறு ஏன் கல்லாயிருக்குன்னு கேக்கறா வேடிக்கையாயில்லே? எனக்கு சோல் தாங்கல்லே சொல்லைச் சொன்னதுமே அதுவாயிடறேன். தாய் என்றாலே தாயாகிவிடுகிறேன். அந்தரத்தின் தாதுக்கள் அத்தனையும் என்னில் நீந்து கையில் என் தாது என்று எது தனியாய், டாக்டருக்குப் பிடிபடும்? என் அடைப்பு உடைஞ்சுப் போச்சு. தெரியறதா? எனக்கு நானில்லை. உங்களை ‘உன்னை’ யென்கிறேன். இந்த ஜன்மத்தில் நீ என் கணவன். ஆனால் இதற்கு முன் எத்தனையோ பிறவிகள் உங்களை, நான் பெற்ற வாசனைகள், காலம் கடந்து என்மேல் வீசுகையில், எதிர் பொங்கும் தாய்மையில் மரியாதைகள் கவிழ்ந்து போகின்றன. ஏன் கையை இழுத்துக்கறேள்?”

“ஏகா, உன்னைப் பார்த்தால் பயமாயிருக்கிறது.”

“பயப்படாதே பாப்பா, அம்மா இதோ இருக்கேனே, என்ன பயம்? பெண்ணாய்ப் பிறந்தாலே தாய்தான்.”

சற்றுநேரம் இருவரும் மெளனமாயிருந்தனர்.

“ஏகா! தூக்கமா?”

“எனக்குத் தூக்கமேது?” அவள் பதில் அவள் உள் எங்கிருந்தோ வந்தது. “சதா விழித்துக்கொண்டிருக்கிறேன். என் விழிப்பில் இமைப்புகூட இல்லை.”

“ஏகா, எனக்கு என்னென்னவோ தோன்றுகிறது. உன் கண் குஹை விழுந்திருக்கிறது; குஹையில் பாம்பு படுத்திருக்கிறது.”

“வாழும் பாம்பு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/264&oldid=1033540" இலிருந்து மீள்விக்கப்பட்டது