பக்கம்:அஞ்சலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 லா. ச. ராமாமிருதம்


போவதையும் வருவதையும், தரங்கிணி கவனிப்பதை அவள் கணவன் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவளும் அதைப் பார்த்துவிட்டாள்.

“பார்த்தேளா, குழந்தையை! பழனியாண்டவர் மாதிரியே இருக்கான்!”

அவன் ஒன்றும் பதில் பேசவில்லை. ஆனால் ரஸத்தைத் தூக்கிக்கொண்டு வேறு ஆள் வந்தபோது தரங்கிணியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் அவனுக்கு சற்று பரிதாபமாய்த்தானிருந்தது. “ஏன், அந்தச் சின்னப் பையன் இல்லை?” என்று கேட்டான்.

மோரைத் தூக்கிக்கொண்டு பையன்தான் வந்தான். அவள் கணவன் அவள் காதண்டை குனிந்து “பழனியாண்டவரைச் சேவித்துக்கொள்” என்று ரகசியமாய்ச் சொல்லி விட்டு ஊறுகாயைத் தொட்டுத் தொண்டை நாக்கில் இழுத்துக் கொண்டான். பையனுக்கு அது காது கேட்டு விட்டதோ என்னவோ, சிரித்த முகத்துடன் அம்மாவிடம் போய் சாவதானமாய் நிறுத்திப் பரிமாறினான். அப்புறம் கூட அங்கேயே நின்றிருந்தான். வாயிதழ்கள் மலர்ந்தபடியிருந்தன.

***

ப்ரசாதத் தட்டை ஏந்தியபடி தரங்கிணி மாடிப்படியேறி அறையுள் நுழைந்து விளக்கைப் போடுவதற்காகக் கதவோரத்தில் இருந்த பொத்தானை அழுத்த—இல்லை, பொத்தான்மேல் வைத்த விரல் அழுத்தாமல் அப்படியே நின்றது. எதிரில் சுவரோரமாய்ப் போட்டிருந்த கட்டிலின் மேல் ஒரு தணல்பொறி கனிந்தது. அம்மாதிரி அவள் கணவன் புகையை உறிஞ்சி இழுக்கையில் அவனுக்கு மனம் சரியில்லை என்று அவள் அறிவாள். அவன் சீற்றங்களை அவள் அறிவாள். அப்போது அவனை யாரும் நெருங்குவதற்கில்லை. முன்பின் சுவடு இலாது கக்கிக் குமுறி எழும் எரிநீர்ச் சுழிகள் அவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/36&oldid=1033392" இலிருந்து மீள்விக்கப்பட்டது