பக்கம்:அஞ்சலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 28 லா. ச. ராமாமிருதம்

“என்ன பதிலே யில்லையே? ஊம் கொட்டினால் அல்லவா?”

“ஊம்...”

“இப்போதுதான் சற்று நேரத்திற்கு முன் ஒரு எண்ணம் தோன்றிற்று. அந்தப் பயலை நம்முடனேயே கூட்டிக் கொண்டால் என்ன? லட்சணமாயிருக்கிறான். புத்திசாலி என்றும் தோன்றுகிறது. நினைத்ததுதான், எனக்கு ஒரே உற்சாகம் உண்டாகிவிட்டது. அவனைத் தேடிக்கொண்டு சமையல்கட்டுக்குப் போனேன். அவனைக் காணோம். வாசல் பக்கம் போனேன் காணோம். பின் கட்டுக்குப் போனேன். அங்கே இருந்தான். என்ன பண்ணிக்கொண்டிருந்தான் என்று நினைக்கிறாய்?”

“என்ன?”

அவன் சிகரெட்டை விச யெறிந்துவிட்டு கட்டிலி லிருந்து குதித்து, அறையின் குறுக்கே முன்னும் பின்னும் நடந்தவாறு கோபாவேசத்துடன் கையை வீசிக்கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டான்.

“தோய்க்கிற கல்லின்மேல் குந்திட்டுக்கொண்டு உட்கார்ந்து, ஒரு சுருட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான்.”

அவள் சிரித்துவிட்டாள்.

இல்லை, இல்லை; அப்படியில்லை அது!” அவன் மேஜைமேல் கோபத்துடன் அறைந்த அறையில் அதன் மேலிருந்த தட்டு அதிர்ந்தது. “சிரிக்கற சமாசாரம் இல்லை. வாண்டுப் பயில்! இவனைப்பற்றி இன்று காலையெல்லாம் நாம் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் என்ன, நான் நினைத்துக்கொண்டு வந்ததென்ன, இவன் இப்போது பண்ணிக் கொண்டிருக்கிறதென்ன? எனக்கு ஒரேயடியாய்ப் பொங்கிக்கொண்டு வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/38&oldid=1033394" இலிருந்து மீள்விக்கப்பட்டது