பக்கம்:அஞ்சலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தரங்கிணி 29

“என்னடா, இப்பொ நீ குடிக்கிற சுருட்டு உன்னை விட நீளமாயிருக்கும் போலிருக்கிறதே!’ என்றேன். அவனுக்கு அப்போதாவது ஒரு பயம் ஏற்படவேண்டாம்? சர்வ சாதாரணமாய்ப் புகையை ஊதிவிட்டு, ‘அதைப் பத்தி உனக்கென்னயா? காசு என் காசுதான்.’ என்றான். விட்டேன் பார், ஒன்று! ‘அப்பாடா’ என்று செவியைப் பொத்திக்கொண்டான். அப்புறம் நான் அங்கு நிற்க வில்லை விடுவிடுவென்று வந்து அவனைத் தொட்ட கையைக் கழுவிக்கொண்டு இப்பொழுதுதான் கட்டிலில் உட்கார்த்தேன்.”

தரங்கிணி மெளனமாய் இருந்தாள். அவன் இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தான்.

“எல்லாம் தலைகீழாய்ப் போய்விட்டது. நான் குட்டிச் சுவராய்த்தான் போவேன். என்னைச் சரிப்படுத்த உரிமையில்லை’ என்று சட்டம் படிக்கிறதுகள்.”

“அதனாலே நீங்கள் அவனிடம் உங்கள் கைவரிசையைக் காண்பிச்சேளாக்கும்!”

அவன் குரல் தடித்தது. “ஏன்? நீயும் எனக்குச் சட்டம் படிக்க ஆரம்பித்து விட்டாயா?”

“இல்லை. ஆனால் நீங்கள் அவனுக்கு அப்பாவா?”

“அப்பாவா?”— அவன் சீற்றத்துடன் கட்டிலிலிருந்து தாவிக் குதித்தான். “என் பிள்ளை இப்படியிருந்தால் என்ன பண்ணுவேன் தெரியுமா? என் பிள்ளை! என் பிள்ளை!!” உணர்ச்சி வேகத்தில் அவனுக்கு மூச்சு அடைத்தது.

அவள் சாவதானமாய், “உங்கள் கையிலிருப்பது என்ன?” என்றாள்.

அவன் தன் கையில் கனிந்துகொண்டிருக்கும் சிகரெட்டை அப்போதுதான் புதிதாய் நினைவோடு கண்டான். அதை ஜன்னலுக்கு வெளியே வீசியெறிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/39&oldid=1022786" இலிருந்து மீள்விக்கப்பட்டது