பக்கம்:அஞ்சலி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 லா. ச. ராமாமிருதம்

அவன் ஆவேசம் புசுக்கென அவிந்தது. கால்கள் வெட வெடத்தன. களைப்புடன் கட்டிலில் சாய்ந்தான். அவள் அப்படியே அவனைத் தழுவிக்கொண்டாள்.

“எப்படியும் நான் கெட்டுப்போனாலும் என் பிள்ளையும் கெட்டுப்போக இஷ்டமாயிருக்குமா?” அவன் குரல் தழுதழுத்தது.

அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. அவனை குழந்தை போல் அணைத்துக்கொண்டிருந்தாள்.

அம்மாதிரிச் சமயங்களில்தான் அவன் அவளை வெகுவாய் நாடினான். அவனை அலைக்கும் தீயை, அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக்கொள்ள முடித்தது.

ஜன்னலுக்கு வெளியே வானத்தில் மேகங்கள் யாருக்கோ வழிவிடுவனபோல் பிரிந்து இரு பக்கங்களிலும் ஒதுங்க ஆரம்பித்தன.

அவள் திடுக்கென்று, “நான் இப்போ ஒரு பித்துக் கொள்ளி ஆகப்போகிறேன்” என்றாள்.

“சந்தோஷம்.”

“உங்களை ஒரு கேள்வி கேக்கப்போறேன்.”

“பித்துக்கொள்ளி கேள்வி!”

“ஆமாம், உங்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ?”

“ம்...ம்...ம்”

“உறும வேண்டாம். பதில் சொல்லுங்கோ.”

“என்ன, இது எந்த நாவலில் எத்தனாவது பக்கம்?”

“எனக்கு அதிலெல்லாம் இஷ்டம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியும். படிச்சால்தான் கேக்கத் தோணுமோ? இல்லாட்டா லோகத்திலே இந்தக் கேள்வியே கிடையாதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/40&oldid=1033395" இலிருந்து மீள்விக்கப்பட்டது