பக்கம்:அஞ்சலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 லா. ச. ராமாமிருதம்

“சத்தியமாம் சத்தியம்! உன் வீட்டுப் புழக்கடையில் போட்டிருக்கும் கொத்தமல்லி பாரு, அது!”

“வாய்வழி வெளிக்குதிக்க அஞ்சும் ஆபாச வசை மொழிகள் இன்னும் எத்தனையோ அடுக்கடுக்காய்ப் பற்களிடையில், அவன் நாக்கு நுனிமேல், வாய்க் கூரையைப் பிளக்கப் பார்ப்பது அவளுக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை.

“நீங்கள் என்ன வேனுமானாலும் திட்டிக்கோங்கோ. எனக்கு ஒண்னும் ஒட்டிக்—ஆ!”—அவள் கண்கள் சொருகிட்டன.

“இப்போது என்ன மாயம்!”

அவன் அருகே வந்து குனிந்து அவளை அப்படியே வாரித் தூக்கினான்.

அவள் அலறினாள். “ஐயோ—இடுப்பு! இடுப்பு’ கயண்டுட்டாப்போல் அப்படித் துடிக்கிறது!”

அவளைக் கட்டிலில் கடத்தினான்.

குங்குமப் பொட்டின்மேல் கோயில் ப்ரசாதமாய் இட்ட உதிரி விபூதிப் பொட்டின் மணம் அவன்மேல் கமழ்ந்தது.

“நான் போய் டாக்டரை கூட்டி வருகிறேன்.”

அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, “இருங்கோ. இன்னும் கொஞ்ச நாழி. இன்னும் சொல்றேன். நீங்கள் மறு கல்யாணம் பண்ணிண்டுதான் ஆகனும். அதுதான் சரி!”

“சரி சரி, நான் டாக்டரைப் போய்க் கூட்டி வருகிறேன்.”

“பத்து வருஷங்கள்! பத்து வருஷங்களாக்கும்! லேசில்லை பத்து வருஷங்கள். இன்னும் நாலு வருஷம் இப்படியே போனால் நான் கிழவி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/44&oldid=1033399" இலிருந்து மீள்விக்கப்பட்டது