பக்கம்:அஞ்சலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 லா ச. ராமாமிருதம்

என் அம்மாவுக்கு நான் இருந்தேன். நீங்கள் அந்த எண்ணத்தை யிழந்துவிட்டு வரட்சியாய்த் தவிச்சுண்டிருக்கேள். எனக்கு நன்றாய்த் தெரியும். ஏன் என்றால் இன்னும் நாலு வருஷம் இப்படியே போனால், நானும் அந்த எண்ணத்தை இழந்துவிடுவேன்; நானும் வரட்சி ஆயிடுவேன். நான் வரண்ட அப்புறம் உசிரோடிருக்க மாட்டேன். ஆனால் எனக்கு உயிர்மேல்தான் ஆசை. நான் செத்துப்போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர். அதனாலே எனக்கு அந்த ஒண்னு கண்டிப்பாய் வேணும். என் மூலம் இல்லா விட்டாலும் உங்கள் மூலமாவது நமக்கு வேணும்...’

***

டாக்டர் வந்து பரிசோதிக்கையிலும் அவள் பிதற்றிக் கொண்டுதானிருந்தாள். தலை பரவாட்டல் ஆடியது. மூடிய கண்களின் மேல் புருவங்கள் மாத்திரம் நெரிந்தன.

“ஆமாம். கண்டிப்பாய் ஒண்ணு இருக்கணும். ஊருக்கெல்லாம் ஒரே நதி ஒடறாப்போலே, நதியில்லாட்டா கிணறாவது இருக்கணும். குளிக்காவிட்டாலும் குடிக்க வாவது ஜலமில்லாவிட்டால் என்ன செய்வோம்? எப்படி உயிர் வாழ்வோம்? அதனாலே எல்லாரும் மொண்டுக்கோங்கோ, வந்து வந்து மொண்டுக்கோங்கோ—வாளியிலும் தவலையிலும் குடத்திலேயுமா மொண்டுக்கோகாங்கோ. வாங்கோ வாங்கோ—அடி கண்ணாட்டி! நீ ஆட வந்தையா—சொம்பைக் கொண்டு வந்தையா?—அம்மா வரல்லியா? அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? உன்னாலே தூக்கிண்டு போக முடியுமோ? நான் துாக்கிண்டு வரட்டுமா? வேண்டாமா? நீயே போறையா? சரி போ! வாங்கோ! வாங்கோ! எல்லோரும் வாங்கோ...!”

பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அவன் அவளண்டை நின்றான். அவன் கண்களோரத்தில் வேள்ளை விழிகளில் ஊசிகள் பாய்ந்துகொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/46&oldid=1033400" இலிருந்து மீள்விக்கப்பட்டது