பக்கம்:அஞ்சலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 லா. ச. ராமாமிருதம்

அடிச்சிப் புடைச்சிருக்கான். அன்னி ராத்திரி சீமெண்ணையை மேலே ஊத்திக் கொளுத்திண்டுடுத்து!”

தரங்கிணி செவிகளைப் பொத்திக் கொண்டாள்.

மாமி சுவரஸ்யமாய் வாய் எச்சிலை உள்ளுக்கு உறிஞ்சிக் கொண்டாள். “அது அப்படிப் போச்சா? அதுக்கு அப்புறம் தருமியின் ஆம்படையானும் செத்துப் போயாச்சு. தருமியும் கோலம் பண்ணிண்டு வெள்ளையும் உடுத்திண்டாச்சு. இன்னிக்குக் கார்த்தாலே ஆத்துக்குக் குளிக்கப் போனாள் போன இடத்துலே தோய்க்கிற கல் வாட்டமாயில்லைன்னு, அதை நகத்திப் புரட்டினாக்கே அதன் அடியிலேருந்து நீளமா பாசி பிடிச்ச கடிகாரச் சங்கலியை எடுக்கறா! இந்தத் தண்ணிக்கு முதல் கொண்டிருக்கிற திருட்டுத்தனத்தைப் பாரேன்! தனியாயிருந்தால் ஒருவேளை அதை அமுக்கியிருப்பாளோ என்னவோ. கூடவே பக்கத்தாத்துப் பொண்ணும் போயிருக்கு. அவ்வளவுதான். ஊரெல்லாம் பத்திண்டுடுத்து. அநியாயமாய் ஒரு பெண்மேலே அபவாதம் சொன்னியே சொன்னியேன்னு தெருவிலே போறவா எல்லாம் மெனக்கெட்டு அவள் வீட்டுள்ளே புகுந்து புகுந்து மூஞ்சியிலே துப்பிட்டுப் போறாள்.

செத்துப்போன அந்தப் பெண்ணின் ஆம்படையான் வந்தான். அவன் ஒண்னும் சொல்லலே. ‘ஏ பாப்பாத்தி என் பெண்சாதியைக் கொன்னவளே நீதான்! இப்பொ நீ அந்தச் சங்கிலியைப் போட்டுக்கிட்டு நிக்கறதைப் பார்க்கணும்’ என்கிறான். போறுண்டியம்மா, போறும், நம்ப மானமே போறது—என்னடி?”

தரங்கிணிக்குத் திடீரெனக் கண்கள் சொருகின. வயிற்றைக் குமட்டிற்று. குடுகுடுவென்று குறட்டோரம் ஓடினாள்.

“என்னடி, உடம்பு சரியில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/58&oldid=1033406" இலிருந்து மீள்விக்கப்பட்டது