பக்கம்:அஞ்சலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஜ ம த க் னி

நினைவு திரும்பியபோது அது தூக்கத்திலிருந்து விழிப்பா, மூர்ச்சையினின்று மீண்ட தெளிவா நிச்சயமாய்ப் புரியவில்லை. மரங்களின் இலைகளிலிருந்து இருண்ட ரகசியங்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. நிலவின் செங்கோளம் வானை உதைத்து எழும்பிக் கொண்டிருந்தது.

மாஞ்சி கண்களைத் தேய்த்துக்கொண்டாள். இமையின் உள்புறம் மின்னல்கள் வெட்டின. அவைகளின் ‘ பளீ ’ரில் பாச்சு குதித்து விளையாடினான். அரைஞாண் தவிர உடலில் வேறேதுமில்லை. விண்ணெனத் தெறித்த வயிறும், சோழிகளைக் குலுக்கினாற் போன்ற அவன் சிரிப்பும் அவள் மார்மேல் மோதின. அவன் கண்களை மறக்கவே முடியாது. ஒன்றில் ஒரே நட்சத்திர ஜொலிப்பு; மற்றதில் சற்று பஞ்சடைந்தாற்போன்று மங்கிய ஒட்டம். பிறப்பின் வார்ப்பே அப்படி.

மாஞ்சியையும் அறியாமல் தொண்டை கேவிற்று. அவள் சப்தமே அவளுக்கு அச்சமாயிருந்தது. குழந்தைகள் முழிச்சுண்டுடுத்தோ? எழுந்து விளக்கைத் துாண்டினாள். இல்லை. மீனாவும் நீனாவும் அயர்ந்து துரங்கிக்கொண்டிருந்தனர். நீனாவின் உதட்டோரத்தில் ‘சொள்’ வழிந்து காய்ந்தது. மீனா திறந்த வாயுடன் லேசாய்க் குறட்டை விட்டுக்கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/62&oldid=1033409" இலிருந்து மீள்விக்கப்பட்டது