பக்கம்:அஞ்சலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 லா. ச. ராமாமிருதம்

பிறகு காலம் எதற்கு? இந்தச் சிருஷ்டியின் லட்சிய புத்திரனே சிருஷ்டியின் அதிபதியாகவுமிருக்கப் போகிறான்—ஒ!” திடீரென அவன் தன்னையிழந்தான். விரலைச் சொடுக்கினான். “எனக்கே இப்பொழுது நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமாய்த் தெரியவில்லை. ஆனால்—ஆனால்—”கையை வீசினான். வார்த்தைகள் ஒன்றன்பின் ஒன்று புரண்டுவந்த தடுக்கின.

“ஆனால், புரிந்ததும் புரியாததுமாய் வலைக்குப் பின்னால் உருவம் மங்கலாய்த் தெரிகிறது. அந்த நிழல் சில சமயங்களில் மேலே தட்டுகையில் அந்தத் தகதகப்பே தாங்க முடியவில்லை—”

“அந்த நாள் எப்போ வரும்?” அந்த நாள் அடுத்த நானே விடியக் காத்திருப்பதுபோல் மாஞ்சி கேட்டாள். அந்தக் கணம் தன் துயரத்தைக்கூட மறந்தாள்.

அவன் புன்னகை புரிந்தான்.

“மாஞ்சி, சில சமயங்களில் நீ குழந்தைதான்! என்று என்றா கேட்கிறாய்? ஒருநாள்—அன்று; ஒரு குழந்தை. என்றென்று சொல்ல? யார், எப்படி என்று சொல்வது? என்றோ? ஆனால் ஒவ்வொரு பிறப்பும், இருப்பும், இறப்பும் அன்றைத்தான் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

“நீங்கள் என்ன சொல்றேள்?”—மாஞ்சிக்குத் தூக்கக் கலக்கம் ஆரம்பித்துவிட்டது.

“நாம் இறக்கவில்லை ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது எப்படியோ ஏனோ, பிறந்து விட்டது. பிறந்த பின், அதனால் இறக்க முடியவில்லை. இருந்துதான் ஆக வேண்டும். ஆனால் சரியாய் இருக்கும் முறையைத் தேடித் தேடி, இருந்து இருந்து, மாற்றி மாற்றி, மாறி மாறித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தவிப்பு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/68&oldid=1033410" இலிருந்து மீள்விக்கப்பட்டது