பக்கம்:அஞ்சலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
v

என்னெதிரே அகன்ற கடல் விரிவில் ஜலமுகமாய் என் சகோதரியை, ஜன்மத்தின் பிரதிநிதியாய் என் கற்பனையில் கண்டேன்-என்று ஒருவேளை சுலபமாய்க்கூட-இப்போது சொல்லிவிடலாம். ஆனால் அப்போது என்ன தோன்றிற்றோ அது தரங்கிணியெனும் பெயரில் அருவியாகப் பெருகிப் பாய்ந்து அதன் அழுத்தத்தினின்று நான் விடுதலை பெற்றேன்.

நான் ஏறிய கரையில் நின்று என்னின்று பெருகியதைக் கவனிக்கையில் நான் காண்பது இது அத்தனையும் என்ன எங்கள் குடும்பத்திற்கு நேர்ந்துவிட்ட சோகம். அதன் புயல் தணிந்து அப்புயலினின்றே பிரிந்த தென்றலென் சோகத்தின் காவிய சொரூபந்தானே!

ஆனால் இத்தனையும் அதன் அருவத்தில், அத்தனையும் அழிக்கும் துக்கத்தின் விபத்தில்கூட, நெஞ்சில் எப்படிப் பதிவாயிற்று? ஊழிக்கும் பின்னர் இருப்பேன் என இவ்வழி தன் அழியாமையை உணர்த்தும் உயிரின் பெருமைக்கு இதுதான் சான்றோ?

இவ்வுயிரே பஞ்சபூதங்களின் சேர்க்கைதானே? ஜலத்தின் தன்மையாய், உயிரின் தன்மையை ஒரளவேனும் ஆராய முடிந்தால், பிற நான்கின் களங்களிலும், அவை அவைகளின் இயல்பை உயிரில் உருவேற்றிக் கண்டால் என்ன?

இந்தச் சோதனையின் விளைவுகள்தாம் இந்த முயற்சி.

இம்மாதிரி நியமித்துக்கொண்டுவிட்டேனே, இது சாத்தியமா? இந்நியமனங்களை உருவாக்குவது எப்படி என்ற கவலை எனக்கு ஏற்படவில்லை. தரங்கிணிக்கு நேர்ந்ததுபோலவே மற்ற நால்வரும் தோன்றுவார்கள். முன்னே பின்னே அவ்வளவுதானே? எனும் நம்பிக்கை மாத்திரமல்ல, அவர்கள் ஏற்கெனவே தோன்றியிருக்கிறார்கள். சோதனையில் அவர்களை வெளிப்படுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/7&oldid=1030106" இலிருந்து மீள்விக்கப்பட்டது