பக்கம்:அஞ்சலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 65

இப்பொழுது தெரிகிறது. அவள் தன்னையே என்மேல் கொட்டிக்கொண்டு விட்டாள். அவளே அவளை, அன்று பற்றிய தீ உள்ளே பிடித்துக்கொண்டு எரிகையில் வேறு மாதிரியாய்த்தான் ஆகிவிட்டாள். பேச்சிலும் செய்கைகளிலும் ஏதோ ஒரு அர்ப்பணித்த தன்மை, ஒரு விரக்தி. அதனால் அவளுக்கு எங்களிடமில்லாத ஒரு முழுமை. எப்பவும் ஒரு சுறுசுறுப்பு, ஒரு கலகலப்பு. சிரித்துக் கொண்டு முகமலர்ச்சியாயிருப்பாள். ஆனால் அந்தச் சிரிப்பை அவள் சிரிக்கும்போதே அதைத் தன்னிடம் தனக்கென்று வைத்துக்கொள்ளாது எல்லோருக்கும் உடனே பங்காய் அள்ளிக் கொட்டிவிடுவது போன்றிருக்கும். உண்மையில் அவள் சாதாரணம் மீறியவளானாள். எதற்குத் தன்னை அப்படித் தனக்குள் அர்ப்பணித்துக் கொண்டு விட்டாளோ அதுவாய்த் தானாகிகொண்டிருந்தாள். அதன் வழியே தன்னை வேகமாய் விரட்டி கொண்டிருந்தாள்.

வயது ஏறஏற அதற்குத் தகுந்தாற்போல் நான் ஆகாயத்தை எப்படிச் சுண்டு விரலால் எட்டித் தொடுவது, சமுத்திரத்தைச் சாக்கடையாய் எப்படித் தாண்டுவது, ஒரே நாளில் விதை விதைத்துப் பயிராக்கிப் பழ மறுப்பது என்றெல்லாம் மாடிக் கட்டைச் சுவர் மேல் உட்கார்ந்து, சில சமயங்களில் யோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்.

‘அம்பீ!—’ என்று எதற்காகவாவது கூப்பிட்டுக் கொண்டே கைவளை குலுங்க மாடிப்படி தடதடவென ஏறி வருவாள்.

“என்ன அக்கா!”

“அக்கான்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்வேன்! அதுவும் லட்சுமின்னு ஆத்துலே பேரை வெச்சுட்டு!”

அ.—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/75&oldid=1033417" இலிருந்து மீள்விக்கப்பட்டது