பக்கம்:அஞ்சலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 லா. ச. ராமாமிருதம்

அவனுள் திடீரென பொட்டென உடைந்து ஜமதக்னி விக்கி விக்கி அழுதான். விளக்குச் சுடர் ஆடி ஆடி நெளிந்தது. கைகளுள் புதைந்த முகத்திலிருந்து உடல் வரை ஒரு ஜ்வாலை கிளை பிரிந்து அவன்மேல் ஓடிற்று.

“என்னால்தானே லட்சுமிக்கு இப்படி நேர்ந்தது! நான் ஏன் இப்படி இவளுக்குச் சாபமாய் விளைந்தேன்?” என்று சில சமயங்களில் என்னால் எண்ணாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் எண்ணங்களைக் கண்டுகொண்டு பந்தை உதைப்பதுபோல் அவ்வளவு அனாயாஸமாய்ச் சிரித்துக்கொண்டே அவைகளை என்னின்று உதறியெறிவாள்.

“என்னடா என் கையைப் பார்த்துப் பொருமிண்டு இருக்கே? நான் சில விஷயங்களில் விடுதலை ஆனவள். உங்கள் எல்லோரையும்விட மேலானவள் தெரியுமா?”

பாதி புரிந்ததும் புரியாததுமாய், புரிந்தாற்போல் சிரிப்பேன், தலையை ஆட்டிக்கொண்டு. கைப்பிடிச் சுவரின்மேல் வந்து உட்காருவாள், ஒரு காலை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிஷம்கூட அசையாது அவளால் இருக்க முடியாது.

“பார் உங்களுக்கெல்லாம் நான் தாயாயிருக்கேன். அப்பா உள்படத்தான். அம்மாவுக்குத்தான் கையாலாக வில்லையே, உங்களை யார் பாத்துக்கறா? நீங்கள் அத்தனைபேரும், என்னைப் பெற்ற என் அம்மாவையும் சேர்த்துத்தான் நீங்கள் என் குழந்தைகள். ஆனால் அப்பவே நான் உன் குழந்தை, உனக்கு நான் முன்பிறப்பு தான். ஆனால் உன்னைத் தவிர எனக்கு யார் கதி? எனக்குப் படிப்பில்லை, படிப்பில் ஆசையுமில்லை.உன் சோற்றில் ஒரு பங்கு எனக்குக் கொடுக்காமல் போயிடப் போறயா இல்லாட்டா நான்தான் விடப்போறேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/76&oldid=1033418" இலிருந்து மீள்விக்கப்பட்டது