பக்கம்:அஞ்சலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 லா ச. ராமாமிருதம்

பித்துவிட்டது. அடுத்த தெருவில் சிவாலயத்தில் காலைச் சந்திமணி அடிக்க ஆரம்பித்தது. லக்ஷ்மிக்கும் மூச்சு அடங்கிற்று. அவள் தூக்கத்தில் ப்ரமிக்கத்தக்க அழகுடன் பொலித்தாள்.

லஷ்மிக்கு நான்தான் கொள்ளியிட்டேன். அவளிஷ்டம் அப்படித்தானிருந்திருக்கும். அடுத்த நாள் அவள் அஸ்தியைச் சேர்த்த பானையைத் தோளில் தாங்கிக் கொண்டு நான் சமுத்திரத்துக்குச் செல்கையில் பானையில் எங்கோ கசிவு ஏற்பட்டு என் மார்பிலும் தோளிலும் அஸ்தி ஜலமும் பாலும் வழிய ஆரம்பித்தன. அந்த சமயத் தில் லக்ஷ்மிதான் அப்படி அகங்குளிர்ந்து என்னுள் இறங்குகிறாள் என்று நான் நினைத்துக் கொள்கையில் அதுதான் நிஜமாய் இருந்தது.

அவளுடைய கடைசி மூச்சிலும் என்னை ஸ்மரிக்கும் இந்த அற்புதமான அன்பிற்கு நான் லாயக்கா? ஒரு நாளல்ல, இருநாளில்லை. இந்தப் பூஜை விளக்கண்டை உட்கார்ந்துகொண்டு நான் சிந்திப்பதுண்டு.

மாஞ்சி, இந்த விளக்கை என்தாய் தன்னோடு கொண்டு வந்தாள் அதற்குமுன் இரு தலைமுறைகள் அவள் வீட்டில் இருந்தது. இப்படியே நின்றுகொண்டு எத்தனைக்கோ சாக்ஷியாய் இருந்திருக்கிறது. நான் ஒன்றிருமுறை கடுநோயாய் பாயில் விழுந்திருக்கையில், நான் சொஸ்தமாக வேண்டுமென்று ஏற்றி வைத்து லஷ்மி இதை வணங்குகையில், அவள் சொன்னதைக் கேட்டிருக்கிறது. ஆனால் அவள் விஷயத்தில் ஏன் ஏமாற்றிவிட்டது?

“ஆண்டவனே, நீயென்று தனியாயிருந்தால், நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? இதோ இரவு வருகிறது.........”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/82&oldid=1033422" இலிருந்து மீள்விக்கப்பட்டது