பக்கம்:அஞ்சலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 லா. ச. ராமாமிருதம்

மாஞ்சி குழந்தையைத் தொட்டிலிலிருந்து வாரிக் கொண்டு பின் பக்கமாய் வந்து, அவன் மடியில் பலவந்தமாய்க் கிடத்தினாள்.

“இப்பவாவது உங்கள் பிள்ளையைப் பார்க்கறேளா பார்க்கறேன்!”

அவன் அதன் கன்னத்தை நிமிண்டினான். அது அவன் மூக்கை எட்டிப் பிடிக்க முயன்றது. மாஞ்சி அவன் பக்கத்தில் உட்கார்ந்து கைகளை மடியில் ஊன்றிக்கொண்டாள்.

“பாருங்கோ பாருங்கோ, நீங்கள் புடிச்சுத் தள்ளினாலும் அவன் உங்களை விடமாட்டான்.”

“நான் அவனைப் பிடித்துத் தள்ளவில்லை. நான் யாரையுமே பிடித்துத் தள்ளவில்லை. ஆனால் உன் மாதிரி கெட்டியாய் அமுக்கிப் பிடித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.”

காரணம் புரியாமல், மாஞ்சிக்குப் ‘புர்’ ரென்று மூக்கைப் பொத்துக்கொண்டு கோபம் வந்துவிட்டது. அவன் மடியிலிருந்து குழந்தையை எடுக்க முயன்றாள். அவன் மெதுவாய்த் தடுத்தான்.

“ஏன்? என்ன அவசரம் இப்போ?”

“நீங்கள் எப்பவும் எதுக்கெடுத்தாலும் என்னைக் கேலி பண்ணிண்டிருக்கேள். அப்படி என்னவாம் நான் உலகத்துத் தாய்மார்களை விட வேறே மாதிரியா இருக்கேனாம்?”

“ஒஹ்-ஹோ!”

ஆமாம், நீங்கள்தான் உலகத்து ஆம்படையான் மாதிரி என்னிடமில்லை. ஏன், ஏன், ஏன் இப்படி என் விஷயத்திலே இருக்கேள்? அவளுக்கு அழுகை வந்து விட்டது.

“எப்படி இருக்கிறேன்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/86&oldid=1033426" இலிருந்து மீள்விக்கப்பட்டது