பக்கம்:அஞ்சலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 லா. ச. ராமாமிருதம்

பாதிக்குமேல் அசிங்கமான நரை. உடல் சரிந்துவிட்டது. இத்தனைக்கும் அந்தப் பிள்ளைக்குப்பின் வேறு பேறுகூட இல்லை.

அவள் கணவனை ஓரக்கண்ணால் கவனித்தாள்—ஜமதக்னி குத்து விளக்கண்டை உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. இவர் மாத்திரம் ஏன் கொஞ்சங் கூட மாறவில்லை? இந்த எண்ணம் இன்றுதான் புதிது போல் ஸ்பஷ்டமாய் மனதில் எழுகையில், அவளுக்கு அவள் கணவன்மேல் அசூயை தட்டிற்று. இருவரும் சேர்ந்து எங்கேயாவது வெளியில் போக நேர்ந்தால் அவளுக்கு வெட்கமாயிருந்தது. அவருடைய யெளவனத்தின் ரகசியந்தான் என்ன, முத்தளவில் நின்றெரியும் சுடர்போல்? எந்த எண்ணெய் அவரை மாத்திரம் அப்படிக் காப்பாற்றுகிறது?

ஒருநாள் தலைவலியென்று அவர் படுத்த ஞாபகம் அவளுக்கு இல்லை. ஆசையுடன் நெற்றிக்குத் தாய்ப்பாலிட்டு, ஜூரமடங்கப் பக்கத்தில் உட்கார்ந்து விசிறி விட்டு, நோய்க்குப் பணிவிடை செய்த நினைவு அவளுக்கில்லை; மருந்துக்குக்கூட.

அவள் கவனம் குத்துவிளக்கின்மேல் சென்றது. மங்கா விளக்கென சங்கற்பமா யில்லாவிட்டாலும் அது எரியாத வேளை அதிகமில்லை. அதை வாரத்திற்கு ஒருமுறை தேய்க்கும் நேரம் தவிர எப்படியோ அதை மாத்திரம் ஜமதக்னிதான் ஏற்றிக்கொண்டிருந்தான். அப்படித்தான் நேர்ந்தது. என்றேனும் அதைத் தான் ஏற்ற வேண்டும் என்கிற ஞாபகத்துடன் அவள் அவசரமாய்க் கூடதிற்கு வந்தால், அது முன்னாலேயே எரிந்துகொண்டு நிற்கும்! லக்ஷ்மி படத்திலிருந்து அவளைப் பார்த்துச் சிரிப்பாள். பல சமயங்களில் ஏமாற்றமாயிருக்கும். இந்த வீட்டில் இந்த விளக்கின் அதிகாரம்தானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/90&oldid=1033428" இலிருந்து மீள்விக்கப்பட்டது