பக்கம்:அஞ்சலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 81

“நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லையே!”

ஆனால் அவன்தான் ஏற்றிக்கொண்டிருந்தான்.

அவள் வருவது கண்டு புன்னகை பூத்தான்.

“என்ன ஒரு மாதிரியா யிருக்கிறாய்?”

“என்னமோ மாதிரியாயிருக்கு. ஏதேதோ பழசெல்லாம் நினைப்பெடுத்தது” என்று சொல்லிக்கொண்டே மாஞ்சி அசதியுடன் அருகே உட்கார்ந்தாள்.

“வீடே இன்னிக்கு ஒரே வெறிச்சுன்னு இருக்கு. வீட்டில் ஒருத்தருமேயில்லை பாருங்கோ. நீங்களும் வேளியிலே போயிட்டேள்னா, அப்புறம் நானும், இந்தக் கூடத்துச் செவுர்களுந்தான் பாக்கி, சே! ஒரோகு சமயத்திலே எதுக்காக இந்த உடம்போடு உசிர் ஒட்டிண்டிருக்குன்னுகூட அலுப்பாயிருக்கு!”

“உடம்போடு உயிர் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. உயிரோடுதான் உடம்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது. உடம்பைவிட உயிர் ரொம்ப ரொம்பப் பெரிது.”

“சரி, அப்படித்தான் இருக்கட்டுமே. எனக்கு இப்போ தர்க்கம் பண்ணச் சக்தியில்லை.”

“ஏதாவது ஒரு விஷயம் சொன்னால், யார் சொன்னாலும் சரி, அது ‘கரெக்ட் டாயிருக்கணும்” என்றான் சிரித்துக்கொண்டே.

“அது சரி, எல்லாம் ஒங்க ‘கர்ரெக்டை’ப் பத்திக்கூட நினைப்பு வந்தது.”

“என்னது?”

கைப் புத்தகத்தைச் சட்டெனப் ‘பட்’டென மூடினான்.

அ.—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/91&oldid=1033429" இலிருந்து மீள்விக்கப்பட்டது