பக்கம்:அஞ்சலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 லா. ச. ராமாமிருதம்

அவ்வளவுதான் மாஞ்சிக்குத் துக்கம் உடைத்துக் கொண்டது. பெருங் குரல் எடுத்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஜமதக்னி கைகளை மடிமேல் கோர்த்துக்கொண்டு, அமைதியால், விளக்கைப் பார்த்துக்கொண்டு மெளனமாயிருந்தான்.

அவள் அழுகை மெதுவாய் அலை அடங்கியது. முன்றானையால் கண்களை இழுத்துத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

“இன்னிக்கு என்னவோ, எனக்கு இப்படி இருக்கு—”

“மாஞ்சி, எப்படியும் ஒன்று நான் சொல்கிறேன். இதை நிஜம் என்று வைத்துக்கொள். நீ எதை நினைத்துக் கொண்டு அழுதாலும் சரி, ஒவ்வொன்றின் நியதி இந்த இந்த மாதிரி என்று எனக்குச் சில நிச்சயமான தீர்மானங்கள் உண்டு.”

“யார் இல்லேன்னா?”

“அப்படி வெறும் வாய் வார்த்தையால் சொன்னால் மாத்திரம் போதாது; காரியத்திலும் இருக்க வேண்டும். காரியத்தைக் குறிக்காத வெறும் வார்த்தைகள் என்ன பிரயோசனம்? அதைவிட அவ் வார்த்தைகள் குறிக்கும் எண்ணங்கள் எழாமல் இருந்தாலே நல்லது.”

“ஆமாம், சுலபமாய்ச் சொல்லிப்பிடறேள். நல்லதோ பொல்லாதோ எண்ணங்கள் மனசுலே வரத்தையும் போவதையும் நீங்கள் தடுக்க முடியாது. எங்கே, ஒரு எண்ணங்கூட எண்ணாமல், நீங்கள் ஒரு நிமிஷம் ஒரு வினாடி இருந்துடுங்களேன், பார்க்கலாம்!—”

அவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

கொஞ்ச நேரம் இருவரும் பேசவில்லை. மாஞ்சி அவன் மடிமேல் மெதுவாய்க் கைவைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/92&oldid=1033430" இலிருந்து மீள்விக்கப்பட்டது