பக்கம்:அஞ்சலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84 லா. ச. ராமாமிருதம்

“ஏன் அப்படியெல்லாம் நெனைச்சுக்கறே? இருக்க வேண்டிய இடத்தில இருந்துகொண்டு நன்றாய், செளக்கியமாய் இருக்கிறாள் என்று நினைத்துக்கொள்ளேன்.”

“எப்படி நினைச்சுக்கறது? தண்ணிதாண்டி எங்கேயோ அவள் ஆம்படையான் ஆப்பிரிக்காவுக்குப் போறான்னு கூடச் சேர்த்து அனுப்பிச்சாச்சு. நான் செத்தாலும் அவள் வரமுடியாது. அவளுக்குத்தலை வலிச்சாலும் நாம் போக முடியாது. எழுதிப் போட்ட வரி போறத்துக்கோ வரத்துக்கோ வேளைக்கு வாரம் பிடிக்கும், குழந்தையை நான் நிறுத்தி வெச்சிண்டிருப்பேன். நான் சொன்னத்தை அவள் கேட்டிருப்பாள். நீங்கதான் குறுக்கே நின்னு அவள் மனசைக் கலைச்சு, காடோ மலையோ கண்காணாத இடத்துக்கு அனுப்பிச்சுட்டேள். ஊரில் இருக்கிறவா அத்தனைபேருக்கும் உள்ளூர் சம்பந்தம் அகப்படல்லையா? உங்களுக்கு மாத்திரம் இப்படித்தான் கிட்டனுமா?”

“சம்பந்தம் பண்ணுகையில் அவன் ஆப்பிரிக்கா போவதாயிருந்ததா? அப்புறம் அவனுக்கு வெளிச் சீமைக்குப் போனால் உத்தியோகம் உயரும் என்றிருந்தால் அது என் குற்றமா? அல்லது உன் செளகரியத்திற்காக, அவன் இங்கேயே தங்கிவிட வேண்டுமா? ஏன் பெண்ணைப் பெற்றுவிட்ட தாய்மார்கள் நியாயமே தனி நியாயமா யிருக்கிறது? தங்கள் பெண்கள் எல்லாம் அல்லிகளாய்த் தானிருக்க வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறார்கள்!”

“நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லுங்கோ. என்னைப் பொறுத்தவரையில், நீனா நமக்கு உசிரோடு செத்துப்போயாச்சு. அவள் திரும்பிவர அன்னிக்கு, நானும் உசிரோடிருந்தால், நான் புது நீனாவைப் பெத்து எடுத்ததாகவே நினைச்சுக்கவேண்டியதுதான்.”

“ததாஸ்து! அப்படி நேர்ந்தால், உன் சந்தோஷம் இரட்டிப்பு மடங்கு ஆகாதா?” .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/94&oldid=1033432" இலிருந்து மீள்விக்கப்பட்டது