பக்கம்:அஞ்சலி.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 லா. ச. ராமாமிருதம்

பிடுங்கிண்டு, உங்கள் இடுப்பு பெல்டை அவிழ்த்து அதை தொங்கத் தொங்கப் புடிச்சுண்டு, இன்னொரு கையாலே அவனை முன்னாலே தள்ளிண்டு நீங்கள் மாடிக்கு ஏறின காட்சி என் கண் முன்னாலே இப்போ நிக்கறது. அது ஏன் கோபம் வந்தால் வாய் திறக்க மாட்டேன்கிறேள்? கண் கொதிச்சுண்டு மூஞ்சி மாத்திரம் ஒரு மாதிரியா ஆயிடறது. மாடிலேருந்து அடிக்கு அடி அவன் கதறலும், துடிச்ச துடிப்பும் ஐயோ...!” மாஞ்சி தலையை உதறிக்கொண்டு செவிகளைப் பொத்திக்கொண்டாள்.

“நான் அவனையா அடித்தேன்?”

“உங்கள் நெஞ்சு உரத்தை நான் என்னென்று சொல்லுவேன்?” ஆவேசம் வந்தவளாய் மாஞ்சி கத்தினாள். “குழந்தை உடம்பை ரத்தக் கிளறி ஆக்கி விட்டு, அன்னிக்கு ராத்திரி அவனுக்குச் சோறும் போடக் கூடாதுன்னு உங்களுக்குத்தான் அதிகாரம் இருக்குன்னு ஆக்கினை பண்ணிவிட்டு, கொடியடுப்புலே குண்டு சொம்பில் குழந்தைக்கு கொதிக்கிற சாதத்தை அப்படியே காலாலே உதைச்சுக் கொட்டிவிட்டு—அதுவும் அடுப்பை, சீதேவியைக் காலால் உதைச்சுட்டுப் போயிட்டு, இத்தனையும் பண்ணிவிட்டு, என்கிட்டேயே வந்து அவனையா அடிச்சேன்னு கேக்கறேள்! ஹும், நாளாயிடுத்துன்னா மறந்துபோயிடுமா?

அவன் அவளை இழுத்து மார்புடன் மூச்சுத் திணற இறுக்கிக் கொண்டான்.

“மாஞ்சி மாஞ்சி, உனக்கு என் மேல் ஆசையில்லையா?”

அவன், கண்களில் அவன் கண்ணுள் தன் பிம்பம் காண்கையில் மாஞ்சி குழப்பமடைந்தாள். நினைவு தடுக்கிற்று. அக் கேள்வியின் மிருக வேதனையில் அவளுக்கு அழுகை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/96&oldid=1033433" இருந்து மீள்விக்கப்பட்டது