பக்கம்:அஞ்சலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 87

“ஏன், அப்படிக் கேட்கிறேள்?”

“ஆம், அப்படித்தான் கேட்பேன். உனக்கு என் மேலிருக்கும் ஆசை உண்மையானால் இதை நீ நிச்சயம் நம்புவாய். நான் அவனை அடித்தது உண்மை. ஆனால், வலியெல்லாம் என்னுடையதுதான். வலியின் அடையாளங்கள் அவன்மேல்தான், ஆனால் வலியின் வலி எனக்குத் தான். சத்தியமாய் அப்படித்தான்.”

“நீங்கள் என்ன சொல்றேள்?”

மெளனமாய்ச் சிந்தித்துவிட்டு, அவளைத் திடீரெனத் தன் ஆலிங்கனத்தினின்று விடுவித்தான். அவன் பெருமூச்செறிந்த அவன் கஷ்டம் என்னென்று அவளுக்கும் புரியவில்லை.

“நான் அதற்குச் சொல்ல வரவில்லை” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவன் கவனிக்கவில்லை. தான் எழுப்பும் பழைய நினைவுகளுள் புகுந்துகொண்டிருந்தான்.

“இப்போது பார்க்கிறேன், மீனாவின் கல்யாணத்தை.”

“அது இன்னொரு வயிற்றெரிச்சல்! கலியாணத்தின் போதே சம்பந்திப் பேர்களோடு தீராத மனஸ்தாபமா நேர்ந்தாச்சு. அபசகுணம்மாதிரி நம்பெண் மணப்பாயில் நின்னுண்டிருக்கிறத்திலேயே குத்துவிளக்கில் முன்றானையைப் பற்ற வெச்சுண்டுட்டா. ஒரே கூக்குரலாய்ப் போயிடுத்து. கலியான வீட்டிலே அடிச்சு விழறான்னு பேச்சுக்குச் சொல்லுவா, கண்கூடா ஆயிடுத்து. எப்போ கூரைப்புடவை பத்திண்டதோ, எனக்கு அப்பவே தெரிஞ்சிடுத்து, நம் மீனா வாழ்க்கை உருப்பட்ட மாதிரிதான்னு. நினைச்சமாதிரியே ஆயிடுத்து.”

மாஞ்சி தன்னிரக்கத்தில் சூள் கொட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/97&oldid=1033434" இலிருந்து மீள்விக்கப்பட்டது