பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3

இன்றைய சமுதாயம் நேர்மாறான பண்புகளின் வளர்ப்பு பண்ணையாக - எதிர் மறைகளின் போஷிப்பு நிலையமாக - உள்ளது.

நவநாகரிகத்தின் பகட்டுதலைக் காண்கிறோம். இரும்பின் இயந்திரச் சிரிப்பைக் கேட்கிறோம். செல்வத்தின் டாம்பீகத்தை உணர்கிறோம். அறிவின் பெரும் சக்தியை அறிகிறோம்.

அதே வேளையில் பக்கத்திலேயே காட்டுமிராண்டித்தனத்தையும், பழங்கால முறைகளையும், தரித்திரத்தின் பயங்கரக்கொலுவையும், அறியாமையின் வியாபகத்தையும் கண்டு உணரலாம்.

பட்டணங்களுக்கு நேர்மாறானா பட்டிக்காடுகளைப் பற்றிச் சொல்லவில்லை. நாகரிகம் மத்தாப்பூப் பகட்டும் சிந்தி ஒளியுறுத்துகிற நகரங்கள் கூட மனிதவர்க்கத்தின் செயலற்ற தன்மையை எடுத்துக் காட்டும் நரகங்களாக உள்ளன என்பதை யாரும் உணரமுடியும்,

புதுயுக மாதிரிகளாக அமைக்கப்பெற்ற பெரிய பவனங்கள், மாடிகள், உல்லாச மாளிகைகள் அலங்காரப் பெயர்கள் ஏற்ற ஆடம்பர நிலையங்கள் இருக்கின்றன.

அதே தெருவிலே, சாக்கடையோரத்திலும், ரஸ்தாவைச் செப்பனிடக் கொட்டிய கற்கன் மேலும், கடைகளின் வெளிப்பலகைகளிலும் ரயில்வே நிலையங்கள் முன்னிலும் ஒண்டிக்கிடக்கின்ற ஆயிரமாயிரம் மனித உருவங்களும் உண்டு.