பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

வாழ்க்கை முறைகள் வகுக்கப் பெற வேண்டும். வசதியான வாழ்வுக்கு இன்றியமையாத பொருளாதார சமத்துவம் நாட்டிலே அமைக்கப்படுதல் அவசியம். இன்றைய வாழ்க்கை, தேவைப் பூர்த்தி, இன்பம் இவற்றைப்பற்றி கவலைப்படவேண்டிய நேரத்தில், உழைப்பாளியின் உரிமைகள், சகவாழ்வு, பொருளாதாரம் இவை பற்றித் திட்டமிடவேண்டிய நேரத்தில் கடவுளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரம் கிடையாது.

நம்மைப்பற்றி, நமது வாழ்க்கை அமைப்பைப் பற்றி நமது நிகழ்காலம். எதிர்காலம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிற பிரச்னைகளைப் பற்றி நாம்தான் முடிவுகட்டியாக வேண்டும். நடப்பது நடக்கத்தான் செய்யும். எல்லாம் கடவுள் செயல். எல்லாம் நன்மைக்கே என்று கையாலாகாத வேதாந்தம் இன்று தேவையில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு மக்கள் தான் விடை கண்டாக வேண்டும். கடவுள் என்கிற புதிருக்கு விடை காணவேண்டிய அவசியமில்லை. விடைகண்டு ஆகப்போகிறது மில்லை. ஆகவே, கடவுளே (ஒரு பதார்த்தம் இருந்தால்) இருக்கிற இடத்திலேயே இருக்கவிட்டு விட்டு, நமது வழியில் முன்னேறவேண்டும். ஆகையால் கடவுளைப்பற்றி கவலைப்படு, மோட்ச லோகத்தில் சீட் ரிசர்வ் பண்ண இப்பொழுதே புரோககர்களைப் பிடித்து ஆவன செய் என்று வீணத்தனம் பண்ணுகிற புரோகிதத்துக்கு சாவுமணி அடித்துவிடவேண்டும்.

உழைப்பவர்களுக்கு விரோதமாக உழைப்பவர்களிடையே புல்லுருவிகளும், கருங்காலிகளும் தலை தூக்கித் தறுதலைத்தனம் செய்வதும் மனித முன்னேற்றத்தை அரிக்கின்ற வியாதியாகும். இந்தப் பண்புகளும் ஒழித்தாக வேண்டும்.