மனக்கோளாறு
7
கிடைக்காதபோது அவற்றிற்காக ஏங்கிய அவன் உள்ளம் காட்டு வாத்தைச் சுட்டுத் தின்பதிலே பெற்றிருக்கிறது. குழந்தைப் பருவத்திலே தாய்ப் பால் அருந்துவதில் தடை யேற்பட்ட காலத்திலே உண்டான ஏக்கம் மனத்திலே எங்கேயோ அத்தனை ஆண்டுகளாக மறைந்து கிடந்திருக்கிறது. அது பின்னால் காட்டு வாத்தை வேட்டையாடித் தின்னும் ஒரு பெரு விருப்பமாக மாறி வெளிப்பட்டிருக்கிறது.
மனப்பகுப்பு ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மை வெளியான பிறகு அவனுக்குக் காட்டு வாத்து வேட்டையிலே யிருந்த வெறி முற்றிலும் மறைந்து விட்டது. மனப் பகுப்பு ஆராய்ச்சி எப்படி நடக்கிறதென்பதைப் பிறகு பார்ப்போம்.
மனத்திலே எப்படியெல்லாம் ஏக்கங்களும் ஏமாற்றங்களும், துன்பங்களும், தோல்விகளும், அதிர்ச்சிகளும், ஆசைகளும் அழுந்திக்கிடக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். திருப்தி பெறாமல் அழுந்திக் கிடக்கும் இவ்வகையான உணர்ச்சிகளினாலே மனத்திலே பலவிதமான சிக்கல்களும், கோணல்களும் உண்டாகின்றன. அவற்றை நாம் உணர்ந்து கொண்டால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். நம் வீட்டிலே குழந்தைகளை நன்கு வளர்க்கவும் இயலும். மற்றவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியும்.