உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடி மனம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனவசியம்

னம் என்பது சூட்சுமமானது. அதிலே பலவேறு நிலைகள் இருக்கின்றன. பலமாடிகள் கொண்ட ஒரு மாளிகையை மனத்திற்கு உபமானமாகக் கூடச் சொல்லலாம். ஏனென்றால் மனத்திலே அத்தனை நிலைகள் உண்டு. ஆனால் மாடி வீட்டைப் போலத் தனித்தனியான பிரிவினை மனத்திலே கிடையாது. மனம் என்பது ஒன்றேதான். அது சாதாரணமாக வெளிப்படையாகத் தொழிற்படும் நிலையை வெளிமனம் அல்லது நனவு மனம் என்றும், அதையொட்டினாற் போலவே இருந்து தொழிற்படும் பகுதியை நனவடிமனம் அல்லது இடைமனம் என்றும், மறைந்து நிற்கும் பகுதியை அடிமனம் அல்லது மறைமனம் அல்லது நனவிலிமனம் என்றும் கூறுகிறோம். பொதுவாக மனம் என்று கூறும்போது நனவு மனத்தையே குறிப்பிடுகிறோம். இவற்றைப்பற்றி யெல்லாம் மனமெனும் மாயக் குரங்கு என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். மனத்தைப் பற்றிய வேறு பல உண்மைகளையும் அதில் விளக்கியிருக்கிறேன். ஆதலால் அவற்றையே இங்கு மீண்டும் எழுத விரும்பவில்லை.

ஆனால் மனத்தைப் பற்றி ஓரளவு முதலில் தெரிந்து கொண்டால்தான், அம்மனத்தில் ஏற்படும் சிக்கல்களையும் தாழ்வுக் கோட்டங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

மனத்தில் நனவிலி மனம் என்னும் ஆழ்ந்த பகுதி யொன்று இருப்பதாக நன்கு எடுத்துக் காட்டியவர் சிக்மாண்ட் பிராய்டு (Sigmund Freud) என்ற அறிஞராவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/13&oldid=1004401" இலிருந்து மீள்விக்கப்பட்டது