மனவசியம்
13
என்று கூறினால் அது இந்த நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினாள். பிராயருக்கு அவள் கூறியது ஆச்சரியமாக இருந்தது; அதனால் அப்படியே கூறும்படி சொன்னார். அவள் தனக்கு ஒரு சமயம் வந்த பக்கவாத நோயைப்பற்றி மனவசிய நிலையிலிருந்து கொண்டே கூற ஆரம்பித்தாள். அதில் தொடங்கிப் பிறகு தனது அந்தரங்கமான வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் பேசலானாள் பல விஷயங்கள் தொடர்பில்லாமல் வெளியாயின; அவளுடைய ஹிஸ்டிரியா நோய்க்குச் சம்பந்தமான செய்திகளைக் கூறும் போது மிகுந்த உணர்ச்சியோடு பேசினாள். இவற்றையெல்லாம் பிராயர் அநுதாபத்தோடும் பொறுமையோடும் கேட்டுக் கொண்டிருந்தாராம். இப்படி விஷயங்களையெல்லாம் கூறியதனால் அந்த நோயாளிக்கு அதன் பிறகு நோய் குணப்பட்டதுபோல இருந்ததாம். அதனால் அதே மாதிரி பலமுறை பரீட்சை செய்து பார்த்தார் பிராயர். மனவசிய நிலையில் அவளை இருக்கும்படி செய்து அவளுக்கிருக்கும் படியான பலவிதக் கோளாறுகளைப்பற்றி வெவ்வேறு விதமாகக் கேள்விகள் கேட்டார். அவளும் அந்த மனவசிய நிலையில் தன் மனத்தில் தோன்றியவற்றையெல்லாம் கூறிக் கொண்டே வந்தாள். இப்படிக் கூறிவந்ததால் அவளுடைய மனக்கோளாறுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. முன்னால் அவளுக்கு எத்தனையோ வகையான சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. மருந்து கொடுத்தல், மின்சார அதிர்ச்சிச் சிகிச்சை என்றிப்படிப் பல முறைகளைப் பல வைத்தியர்கள் கையாண்டிருக்கிறார்கள். அவற்றிலெல்லாம் குணப்படாத இந்த நோய் இந்த முறையில் குணமாகி வருவதைக் கண்டு பிராயருக்கே ஆச்சரியமாக இருந்தது.