பிராய்டு இதைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவருடைய மனமும் இதில் ஈடுபட்டது. இந்த முறையைக் கையாண்டு பார்க்க அவருக்கும் ஆசையுண்டாயிற்று. பிராயரும் பிராய்டுமாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது இந்த மாதிரியான நோயாளிகளை மனவசிய நிலையிலிருக்கச் செய்து அந்த நோய் தொடங்குவதற்கு முதற் காரணமாக இருந்த சம்பவத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயலுமாறு செய்தனர். அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்துவிட்டால் அதுவே அந்த நோய் நீங்குவதற்குக் காரணமாக இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
இந்த சமயத்தில் ஜீன் மார்ட்டின் ஷார்க்கோ (charcot) என்பவர் பாரிஸில் புகழ்பெற்ற வைத்தியராக இருந்தார். மனவசிய முறையைக் கொண்டு மனநோய்களைக் குணப்படுத்த முதன் முதலாக முயன்ற வைத்தியர்களில் இவரும் ஒருவர். இவரிடத்தில் மனவசிய முறையை மேலும் விரிவாகக் கற்றுக் கொள்ளுவதற்காக பிராய்டு 1855-ல் பாரிஸுக்குச் சென்றார்.
பாரிஸிலிருந்து வியன்னாவுக்குத் திரும்பிய பிறகு பிராய்டு மனவசிய முறையைக் கையாண்டு அது அவ்வளவு திருப்தியான பலனையளிப்பதில்லை என்று கண்டார். அந்தக் காலத்தில் மனவசியத்தை சிகிச்சை முறையிற் கையாண்டவர்கள் மனவசியத் தூக்கத்திலிருக்கிற நோயாளிகளைப் பார்த்துச் சில கட்டளைகளையிடுவார்கள். ஒருவனுக்குக் கைவராமலிருந்தால் அவனை மனவசியத் தூக்கத்தில்