பக்கம்:அடி மனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அடிமனம்

அதிர்ச்சிகளும், முக்கியமான அநுபவங்களும், அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளும், எண்ணங்களும் முற்றிலும் மறைந்து போய்விடுவதில்லை. அவை மனத்திற்குள் எங்கேயோ அழுந்திக்கிடக்கின்றன. மனத்தின் அந்தப் பகுதி சுலபமாக வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. இம்மாதிரியாக மனத்தில் ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று பிராய்டு கண்டார்; இந்தப் பகுதிக்கு அடிமனம் அல்லது நனவிலிமனம் என்று பெயர் கொடுத்தார். மனத்தின் ஆழ்ந்த பகுதி என்றும், நனவுக்கு எளிதில் வராத இச்சைகள் முதலியவை அழுந்திக் கிடக்கும் பகுதியென்றும் இதை விளக்கலாம்.

நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள் முதலியவைகள் பெரும்பாலும் காமம், சினம், கோபம்., அச்சம் முதலான வலிமை மிகுந்த உள்ளக் கிளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவைகளெல்லாம் ஏதாவதொரு காரணத்தால் முதலில் அடக்கப் பட்டிருக்கலாம். சமூகம் ஏற்றுக் கொள்ளாத இச்சைகள் அடக்கப்பட்டிருக்கலாம். வேறு எத்தனையோ காரணங்களாலும் இவை அடக்கப்படுகின்றன.

இவ்வாறு அடக்கப் படுவதால் உள்ளத்திலே கோளாறுகள் ஏற்படுகின்றன; கவலை தோன்றுகிறது. இவற்றின் வேகம் மிகுந்து விட்டால் மனநோயும் உண்டாகிறது

மனநோயுடையவர்களை அவர்கள் நனவிலி மனத்தில் அழுந்திக்கிடக்கும் இச்சைகள், அநுபவங்கள் முதலியவற்றை நனவுக்குக் கொண்டுவருமாறு செய்து அவற்றை மீண்டும் மனத்திலேயே அநுபவிக்கும்படி செய்து விட்டால் மனநோய் நீங்குகிறது. மனம் தாய்மையுறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/23&oldid=1004413" இலிருந்து மீள்விக்கப்பட்டது