பக்கம்:அடி மனம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிராய்டின் ஆராய்ச்சி

29

இன்று இக்கருத்துப் பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

பிராய்டு தமது ஆராய்ச்சியால் கண்டறிந்து கூறிய மற்றொரு விஷயந்தான் பெரிய விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் காரணமாக அமைந்தது. ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் பெற்றிருந்த ஷார்க்கோவிடம் சென்று பிராய்டு ஓராண்டு வேலை செய்தார் என்று முன்பே அறிந்திருக்கிறோம். ஷார்க்கோ ஒரு சமயம் கூறிய வார்த்தைகள் பிராய்டின் மனத்தில் ஆழ்ந்து பதிந்திருந்தன. மனக்கோளாறு, நரம்புக் கோளாறு நோய்களால் வருந்துகின்றவர்களை ஆராய்ந்த தமது அநுபவத்தைக் கொண்டு அவர் ஒரு விஷயம் சொன்னார். “இம்மாதிரி நோய்களிலெல்லாம் பால் சம்பந்தமான சிக்கலே மிக முக்கியமாக இருக்கிறது—அநேகமாக இதையேதான் நான் காண்கிறேன்” என்று அவர் வெளியிட்டார். இது பிராய்டின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. பிராயரும், சிரோபக் (Chrobak) என்பவரும் இதேமாதிரி கருத்துக்களை பிராய்டுக்குப் பேச்சு வாக்கில் கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து அவர்களில் யாரும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யவில்லை. அந்த வேலையை பிராய்டே செய்யலானார்.

நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும்போது அவர்கள் தங்கள் அந்தரங்கமான அநுபவங்களைக் கூறுவதை பிராய்டு கேட்டார். ‘தடையிலாத் தொடர்முறை’யும் இதற்கு உதவியாக இருந்தது. அவ்வாறு அந்தரங்க விஷயங்கள் வெளியாகும்போது நோய்க்குக் காரணமாகப் பெரும்பாலும் பாலுணர்ச்சியும் அதன் கோளாறுமாக இருப்பதை அவரே கண்டார். அவர் மேலும் மேலும் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/34&oldid=1004424" இலிருந்து மீள்விக்கப்பட்டது