பக்கம்:அடி மனம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அடிமனம்

நோயாளிகளை ஆராய்ந்தபோது பாலுந்தலே வாழ்க்கையில் பிரதானமான ஆதிக்கம் செலுத்துகிறது என்கிற எண்ணம் உறுதிப்படலாயிற்று. அதனால் அவர் பாலுந்தலையே வாழ்க்கைக்கு வேகம் கொடுத்து அதைச் செலுத்தும் சக்தியென்று அழுத்தந் திருத்தமாகக் கூறலானார். பால் சம்பந்தமான வாழ்க்கையில் திருப்தி யடைந்திருக்கும் யாருக்கும் மனப்பிரமை போன்ற நரம்பு மண்டலக் கோளாறு வருவது சாத்தியமில்லை என்று அவர் கருதினார். பிராய்டுக்கு முன்னாலும் மனப்பிரமை நோய்களைத் தீர்க்க முயன்றவர்களிற் பலர் அந்நோய்களுக்கும்பாலுந்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப் பட்டதுண்டு. ஆனால் பிராய்டைப் போலப் பாலுந்தலையே வாழ்க்கையின் வேகசக்தியாக யாரும் கருதவில்லை.

பால் என்றாலும் பாலுந்தல் என்றாலும் என்ன என்று ஒரு சந்தேகம் தோன்றலாம். அவற்றைப் பற்றிச் சுருக்கமாக இங்கே தெரிந்து கொள்ளுவோம். மனிதனை ஆட்டி வைக்கிற சக்திகள் சில அவனுக்குள்ளேயே இயற்கையாக அமைந்து கிடக்கின்றன. இந்த சக்திகள் மனிதனுக்கு ஒரு தனிப்பட்ட வேகம் கொடுத்து அவனை உந்துகின்றன; அவனை உந்திச் செயலிலே புகும்படியாகச் செய்கின்றன. இப்படி உந்துவதால் அந்த சக்திகளையே உந்தல்கள் என்று கூறுவார்கள். இந்த உந்தல்களே வாழ்க்கையின் போக்கை அமைக்கின்றன. பசி என்பது ஓர் உந்தல். இது மனிதனுக்கு வேகம் கொடுத்து அவனைத் தொழில் புரியுமாறு செய்கின்றது. இது ஒரு வலிமை வாய்ந்த உந்தல். இதன் தூண்டுதலால் மனிதன் நல்ல காரியமும் செய்வான்; கெட்ட காரியமும் செய்வான். அவனுடைய மற்ற இயல்புகளுக்கு ஏற்றவாறு அவனுடைய நடத்தை அமையும். இனப்பெருக்கத்திற்குக் காரணமாக ஏற்படுகின்ற ஆண் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/35&oldid=1004425" இலிருந்து மீள்விக்கப்பட்டது