34
அடிமனம்
இந்த லிபிடோவுக்கு இன்னும் விரிவான பொருள் கொடுக்கலானார். லிபிடோ என்பது வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் ஒரு பொதுவான உந்தலென்றும் அது பாலுந்தலையும் தன்னுள் அடக்கியிருந்தாலும் பாலுந்தல் ஒன்று மட்டுமன்று என்றும் அவர் கூறினார்.
வேறொரு வகையிலும் யுங்கின் கருத்து பிராய்டின் கருத்திலிருந்து மாறுபடலாயிற்று. நனவிலி மனம் என்று மனத்தில் ஒரு பகுதி உண்டென்றும் அதிலே வாழ்க்கை அநுபவங்களும், அதிர்ச்சிகளும், அடக்கப்பட்ட இச்சைகளும் மறைந்து கிடக்கின்றன என்றும் பிராய்டு தமது ஆராய்ச்சிகளின் பயனாகக் கூறினாரல்லவா? இந்த நனவிலி மனமானது குழந்தையின் பிறப்பிலிருந்தே அமைகின்றது என்பது பிராய்டின் எண்ணம். மலர்ச்சியடையத் தொடங்கும் குழந்தை மனத்தில் பதியும் முதல் அநுபவங்களே முக்கியமானவை யென்றும், அதனால் குழந்தைப் பருவமே பிற்கால வாழ்க்கையின் போக்கை அமைக்கும் வலிமை வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளதையும் நாம் முன்பே அறிவோம். நனவிலி மனக் கொள்கையை யுங் ஏற்றுக் கொண்டாரென்றாலும் அவர் நனவிலி மனத்திற்கு இன்னும் விரிவான வியாக்கியானம் கொடுக்கத் தொடங்கினார். அந்த நனவிலி மனத்திலே பிராய்டு கூறுகிறவாறு குழந்தைப் பருவம் முதல் ஏற்படுகிற அநுபவங்கள் முதலியவை அமிழ்ந்து கிடப்பதோடு இன்னும் வேறொரு முக்கியமாக அமிசம் அதில் உண்டென்று யுங் சொன்னார். ஒருவனுடைய வாழ்க்கை யநுபவம் சிறியது: அதைவிட மிகப் பெரியவை அவனை உள்ளிட்டிருக்கும் மானிட இனத்தின் அநுபவங்கள், மானிட இனத்தின் அநுபவங்க ளெல்லாம் நனவிலி மனத்தில்