சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிகமாக அன்புகாட்டுவதில்லை. குழந்தைகளிடம் அன்பிருந்தாலும் சாதாரணமாக அதை வெளிக்குக் காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப் பட்டால் அப்பொழுது அவற்றினிடம் விசேஷமான அன்பும் கவனமும் செலுத்துவார்கள். நோய் வந்துவிட்டதே என்று பெரிதும் கவலைப் படுவார்கள். இதைக் கண்டு ஒரு சில குழந்தைகள் அந்த அன்பையும் கவனத்தையும் பெறுவதற்காகவே நோயாகப் படுத்து விடுவதுண்டு. குழந்தை தெரிந்தே அவ்வாறு செய்வதாகக் கருத வேண்டியதில்லை. எப்படியோ அந்த நிலைமை உண்டாகுமாறு இந்த மாய மனம் செய்து விடுகிறது.
சிலருக்கு எதிர்பாராத ஒரு துரதிஷ்டம் அல்லது துன்பம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு துறையில் தங்கள் மனத்தை முழுவதும் செலுத்தி அந்தத் துன்பத்தை மெதுவாக மறக்கிறார்கள். ஒருவர் சமூக சேவையிலே ஈடுபடலாம்; ஒருவர் கலைத் துறையிலே இறங்கலாம்; ஒருவர் ஒரு பெரிய தொழில் முறையிலே செல்லலாம். இவ்வாறு ஏதாவது ஒரு துறையில் சென்று தங்கள் துன்பத்தை மறக்கிறார்கள். மற்றும் சிலருக்கு இவ்வாறு ஒன்றும் செய்ய முடிகிறதில்லை. துன்பத்தை மறக்கவும் முடியாமல் அதை எதிர்த்துப் போராடி உண்மையை உணர்ந்து துணிவோடு நிற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள். இப்படிப் பட்டவர்களிடந்தான் மனக்கோளாறுகள் தோன்றுகின்றன.