பக்கம்:அடி மனம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடிமன விந்தைகள்

னம் என்பதிலே வெளிமனம் (நனவு மனம்), இடை மனம், அடிமனம் (நனவிலி மனம்) என்ற முக்கியமான பகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம் என்று முதலில் பார்த்தோம். ஆராய்ச்சிக்காகவும், மனத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்காகவுந்தான் இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம் என்றும், உண்மையில் இப்படிப் பிரிவினை செய்த தனித் தனி பாகங்களே இல்லையென்றும் அப்பொழுதே தெளிவுபடுத்திக் கொண்டோம். மனமே ஒரு சூக்குமமான மாயம். ஆதலால் அதன் பகுதிகளும் மாயமானதே.

மனத்தை வேறொரு வகையாகப் பகுதிகள் செய்து ஆராயலாம் என்றும் கண்டோம். அந்தப் பிரிவினைப்படி இத், அகம், அதீத அகம், நனவுமனம் ஆகிய பகுதிகள் மனத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யலாம். இத் என்பதுதான் அடிமனம் என்று பொதுவாகக் கூறலாம். அதிலிருந்து அகம் தோன்றுகிறது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுகிறது.

இத் எப்பொழுதும் இன்பத்தையே நாடுகிறது; துன்பத்தைத் தவிர்க்க முயல்கிறது. அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட விரும்புவதில்லை; சுயநலம் மிகுந்தது; பகுத்தறிவற்றது. அது தனது இச்சைகள் வாழ்க்கையிலே நிறைவேறாமற் போனால் மனக் கோட்டை கட்டுவதாலும், கனவாலும் பிரமையாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திர சக்தி வாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/57&oldid=1005329" இலிருந்து மீள்விக்கப்பட்டது