உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடி மனம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அடிமனம்

கொண்டு பின்னி விடுகிறது. அந்த வித்தையை அதற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. இது இயல்பூக்கத்தால் உண்டான திறமை. ஆனால் மனிதன் விலங்குகளைப்போல முற்றிலும் இயல் பூக்கங்களின் உந்தல்களாலேயே செயல்புரிவதில்லை. அந்த இயல் பூக்கங்களால் ஏற்படும் சில இச்சைகள் இழிந்தவை என்று அவற்றை அடக்க முயலும் மனச் சான்றும் அவனிடத்திலே அமைகின்றது. அதீத அகம் அந்த வேலையை மேற்கொள்ளுகின்றது.

இயல்பூக்கங்களைப் பற்றிப் பல வகைப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இயல்பூக்கங்களின் எண்ணிக்கையை நிருணயம் செய்யவும் அவற்றால் தனித்தனி உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளை வகுக்கவும் மெக்டூகல் போன்ற மனவியலறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். மெக்டூகல் பதினான்கு இயல்பூக்கங்கள் முக்கியமானவை என்று வகுத்திருக்கிறார். பிராய்டு இயல்பூக்கங்களைப் பற்றி முடிவாக ஒரு கருத்திற்கு வந்தார். அவர் கருத்தின்படி இயல்பூக்கங்களை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். ஒருதொகுதி உயிர் நிலைபெற்றிருப்பதற்கு உதவுகின்றது. மற்றொரு தொகுதி உயிர் நீங்கிச் சாவு ஏற்படுவதற்கு உதவியாக நிற்கின்றது. சடப் பொருளாக இருந்த உலகத்திலே முதலில் எப்படியோ உயிர் தோன்றியிருக்கிறதல்லவா? அப்படித் தோன்றிய பிறகும் பழைய நிலைக்கே செல்லுவதில்தான் இந்த உயிர் வாழ்க்கை முடிகின்றது. அவ்வாறு முடிவதற்கு இந்தத் தொகுதி உதவி செய்கின்றதாம்.

உயிர் நிலைப்பதற்கு உதவி செய்யும் இயல்பூக்கங்களைப் பற்றி நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உணவு தேடூக்கம், கலவியூக்கம் முதலானவை உயிர் நிலைப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/65&oldid=1005340" இலிருந்து மீள்விக்கப்பட்டது