பக்கம்:அடி மனம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவலை

69

தோன்றாமல் தடுக்க வழியுண்டு என்று தெரியவரும். எண்ணத்திலும் செயலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறவன் பயப்பட வேண்டியதில்லை. பொய் தீர்ந்தால் பயம் தீரும் என்று பாரதியார் எழுதியிருக்கிறார். நேர்மையுள்ளவன் பொய்யுரைக்க வேண்டியதில்லை. மனத்திற்குள்ளே ஏற்படுகின்ற பயங்களைப் போக்க வல்லவனுக்கு வெளியுலக பயம் பெரிதல்ல. அதையும் அவன் தன் விவேகத்தால் ஒழித்து விடமுடியும்.

இவ்வாறு பயம் தீர்ந்தவன் கவலையின்றி வாழலாம். ஆகவே அவன் மேலான இன்பம் அடைகின்றான் இதைக் கருத்திற்கொண்டுதான் வாழ்க்கை நெறியைப் பற்றிக் கூறுகின்றபோது இராமலிங்க வள்ளலார் பயம் பூச்சியமாகப் பெறவேண்டும் என்று குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

மேலே விவரித்த மூன்றுவகைப் பயங்களாலும் மனிதனுக்குக் கவலை பிறக்கிறது; மனப் போராட்டங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து அவனுடைய மனிதப் பண்பாகிய ஆளுமையை (Personality) பாதிக்கின்றன.

ஆளுமை என்ற சொல் விரிவான பொருளுடையது. அது ஆளின் தன்மைகளில் ஒன்றுவிடாமல் முழுவதையும் குறிக்கின்றது. அவனுடைய மனத்தின் தன்மைகளை மட்டுமல்ல; தோற்றம், பேச்சு, நடத்தை, பண்பு எல்லா வற்றாலும் ஒருவனுக்கு ஏற்படுகின்ற முழுத்தன்மையை அது காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஆளுமையை உருவாக்குவதில் பாரம்பரியமும், சூழ்நிலையும், வாழ்க்கை அநுபவங்களும், கல்வியும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/74&oldid=1005350" இலிருந்து மீள்விக்கப்பட்டது