பக்கம்:அடி மனம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அடிமனம்

கவலை, மனப் போராட்டம் முதலியவைகளுக்கும் அதில் பெரும் பங்குண்டு.

ஆகவே ஆளுமை என்பது நிலையாக ஒரே மாதிரி இருக்குமென்று கூற முடியாது. அது மாறி அமைந்து கொண்டே இருக்கிறது. முக்கியமாக ஒருவனுடைய வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் ஆளுமையை ஒருவாறு நிரந்தரமாக அமைப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கின்றன. குழந்தைப் பருவத்திலும், குமரப் பருவத்திலும் அதன் வளர்ச்சி அதிகம். பிறகு முதிர்ந்த பருவத்தில் ஓரளவிற்கு மாறுதலின்றி நிலைபெற்றுவிடுகிறது.

இந்த ஆளுமையைப் பிரதானமாகக் கருதி பிராய்டு தமது உளப்பகுப்பியல் கொள்கையை வகுக்கிறார். ஆளுமை எவ்வாறு அமைகின்றதோ அதற்கேற்றவாறு தான் ஒருவனுடைய வாழ்க்கையின் சிறப்பும், தாழ்வும், வெற்றியும், தோல்வியும் ஏற்படுகின்றன.

ஒருவனுடைய இத் என்ற மனப் பகுதியின் வேகங்கள் சமூகச் சூழ்நிலையின் சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள், கட்டுபாடுகள் முதலியவற்றோடு மோதுகின்றன. மோதி அவற்றால் பலவகையாக மாறியமைகின்றன. இதன் விளைவாகவே ஆளுமை அமைகிறது என்றும் இத்தின் வேகங்களில் பால் உந்தலே அடிப்படையானதும் பிரதானமானதும் என்றும் பிராய்டு கருதுகிறார்.

ஆனால் அவரோடு தொடக்கத்தில் ஒத்துழைத்துப் பிறகு கருத்து மாறுபட்ட ஆட்லரும் யுங்கும் இந்த ஆளுமையின் அமைப்பைப் பற்றி வேறு வேறு, விதமான எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/75&oldid=1005351" இலிருந்து மீள்விக்கப்பட்டது