பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்குங் காணோம்' என்று கவியரசர் பாரதியார் பாடியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி இனிமையாகத் தோன்றுவது இயல்பே. ஆனால் பிறமொழிகளுக்கில்லாத சில தனிச்சிறப்புக்கள் தமிழினுக்குண்டு என்பதை டாக்டர் கால்டுவெல், ஜி. யு. போப் முதலிய பல மேனாட்டறிஞர்கள் உணர்ந்து கூறிப் போந்துள்ளனர். தமிழின் தனிச்சிறப்புக் களுள் ஒன்று தமிழின் கவிதைப்பண்பு. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேலாகத் தமிழ்ப்பெருமக்கள் கவிதை வடிவிலேயே இலக்கியங்களை இயற்றி வந்துள்ளனர். சென்ற இரண்டு நூற்றாண்டு களாக உரைநடை யிலக்கியம் வளர்ந்து வந்த போதிலும் தமிழ்க் காப்பியங்களைப்போலப் பல்வளனும் ஒருங்கியன்ற பான்மைபெற்ற உரைநடை நூல்கள் இன்னும் எழவில்லை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் உரைநடை நூல்கள் உயர்ந்த இலக்கியமாகப் போற்றிப் பயிலப்படுவது போலத் தமிழில் நவில்தொறும் புதுப்புது நூனயம் பயக்கும் நூல்கள் என்று எவையும் பயிலப் படுவதில்லை.

இலக்கிய மறுமலர்ச்சிக் காலமான இவ்விருபதாம் நூற்றாண் டில் உரைநடையில் கவிதைப் பண்பைப் புகுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. எதுகை மோன நயங்கள் நிறைந்த அடுக்கு மொழிகளை ஒல்லும் வாயெல்லாம் புகுத்தி உரைநடை யில் கவிதைச் சுவையை மிகுவிக்கப் பலர் முயன்று வருகின்றனர். இத்தகையோருள் காலஞ்சென்ற டாக்டர் சேதுப்பிள்ளை மிகவுங் குறிப்பிடத்தக்கவர். அவரைப் பின்பற்றி இக்காலத்தில் திரு. அ. க. நவநீதகிருஷ்ணன் அவர்கள் அடுக்கு மொழிகளைப் புகுத்திப் பல உரைநடை நூல்களை ஆக்கியிருக்கின்றனர்.