பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாம் கூறிய முன்னோர் பெருமையையும், அவர் நாடாண்ட முறைமையையும் எண்ணி எண்ணி, பல்யானைச் செல்கெழூகுட்டுவன், இன்பம் துய்த்திருக்கும் நிலையில், புலவர் தாம் இறுதியாகக் கூறக்கருதியதைக், கூறத்தொடங்கி "சேரலர் வேந்தே! அவ்வாறு உலகமெல்லாம் ஒருசேரப் புகழப், பேரரசு ஆண்ட அவர்களும், இறுதியில் மாண்டே போயினர்; இன்று அவர் புகழ் நிலைபெற்றுளதே யல்லாது, அப்புகழை ஈட்டிய அவர்கள் இல்லாதுபோயினர்; வேந்தே இவ்வுலக வாழ்வு நிலையற்றது; நின் நாட்டுச் சோலைகள் தோறும், நின் நாட்டுமக்கள் எடுக்கும் வெறியாட்டுவிழாக் குறித்து வந்துகுமுழும் ஆட்டுக்கிடாய்கள் அனைத்தும், வெட்டுண்டு அழிந்துபோவது எத்துணை உறுதியோ, அத்துணை உறுதி, உலகில் பிறந்தார் அனைவரும் இறப்பது; ஆகவே, இறவாப் பெருநிலைவேண்டி அறவுணர்வினை ஆற்றவும் பெறுவாயாக" எனக் கூறிப் பயன்கண்டார்.

"ஒருதாம் ஆகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே;
அதனால் அறவோர் மகனே! மறவோர் செம்மால்!
நின் ஒன்று உரைப்பக் கேண்மதி!
காவு தோறும் இழைத்த வெறிஅயர் களத்தின் இடம்கெடத் தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை, மாயமோ அன்றே"

-புறநானூறு : 366

தன் அரசவை வந்தடைந்து தாமும் தம் சுற்றமும் பசியின்றி வாழ்தற்குப் பரிசில் பெறுவது விடுத்து, தன்னைவாழ்விக்கும் விழுமிய உண்மைகளை, விளங்க உரைத்த புலவர்க்கு, வேண்டுவ அளிக்க விரும்பினான் வேந்தன்;

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/17&oldid=1318127" இலிருந்து மீள்விக்கப்பட்டது