பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அணியறுபது

தன்மைகள் இழந்து போனால் எவையும் புன்மைகளாய் இழிந்து கழிந்து ஒழிந்து போகின்றன.

மனமும் வாக்கும் காயமும் தூய்மையுடையன வாய்த் துலங்கி வருதல் வாய்மை முதலியன மேன்மையாய் வாய்ந்து விளங்கி வருதலாலேயாம்.

துய்மைகள் நீங்கிய பொழுது தீமைகள் ஓங்கி விடுகின்றன. முயன்று வாழ்ந்தால் மனிதன் உயர்ந்து திகழ்கிறான். இரந்து ஏதேனும் வாங்க நேர்ந்தால் அந்தக்கை செத்து விடுகிறது. சத்தியம் தோய்ந்து வரின் அந்த நாக்கு நித்திய மகிமையைப் பெறுகிறது; பொய் பேசினால் அது புலையா யிழிந்து அழிந்து படுகிறது. அறநலன்கள் அமைந்த அந்த உள்ளம் அதிசய மகிமைகளை அடைகிறது. பிறர் மனைவியரை விழைய நேர்ந்தால் அது பிழையாய் மாய்ந்து போகிறது. செத்த மனமும், செத்த நாக்கும், செத்த கையும் எத்தகைய இழிவுகள்! இவற்றை உய்த்து உணர்ந்து உய்தி பெற வேண்டும்.


33. கற்ற படிஒழுகல் கல்விக் கணிஞானம்
உற்ற பிறவிக் குயரணி--பெற்ற
மகவுக் கணிகுடியை மாண்புறுத்தல் செம்மை
தகவுக் கணியாம் தனி.

(ஙங)

இ-ள்

சிறந்த கல்விக்கு அழகு கற்றபடி ஒழுகுதலே; பிறந்த பிறவிக்கு அழகு உயர்ந்த ஞானமே; பெற்ற மகவுக்கு அழகு தான் பிறந்த குடியைச் சிறந்ததாகச் செய்தலே; நடுவுநிலைமைக்கு அழகு மனச் செம்மையாய் எவ்வழியும் நன்மை புரிவதே என்க.