பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அணியறுபது


உயர்த்தி யுள்ளான். சூரியன் ஒளிபோல் இவன் புகழ் ஒளி வையகமும் வானகமும் பரவி யுளது.

மனக் கோட்டம் இல்லாத செவ்விய மாட்சி திவ்விய காட்சியாம். தகவு = நடு நிலைமை. இந்த நேர்மையான நீர்மை தோய்ந்து வரும் அளவே மனிதன் தக்கவனாய் உயர்ந்து வருகிறான். மனம் செம்மையானால் எல்லா நன்மைகளையும் எல்லா மேன்மைகளையும் அவன் எளிதே அடைந்து கொள்கிறான்.


34. உற்ற முயற்சிக் குயரணி ஊதியமே;
அற்ற துறவுக் கணியமைதி;- பெற்ற
பிறவிக் கணியின் பிறவாமை; பேணும்
உறவுக் குரிமை அணி.

(ஙச)

இ-ள்.

உயர்ச்சியான ஊதியம் முயற்சிக்கு அழகு; மனஅமைதி துறவுக்கு அழகு; பின்பு பிறவாமையே பெற்ற பிறவிக்கு அழகு; அன்புரிமையே உறவுக்கு அழகு என்க.

மனிதன் பாடு படுவதெல்லாம் பொருள் வரவை நாடியே. தான் படுகிற பாட்டுக்குத் தக்க இலாபம் கிடைத்தால் அவன் மிக்க மகிழ்ச்சியை அடைகிறான். உரிய ஊதியம் பெரிய இன்பமா வருகிறது.

உலகப் பற்றுக்கள் யாவும் அற்ற துறவிக்குச் சித்த சாந்தி சிவானந்த நிலையமாம். பாசப் புலைகள் நீங்கிய அளவு ஈசன் ஒளிகள் அங்கே ஓங்கி வருகின்றன. நிராசையே நிலையான பேரின்பம்.