பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

99

மனிதப் பிறவி அறிவு மிகவுடையது; அதனை அருமையாக அடைந்தவன் அதனால் அடைய உரியதை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும். ஆசை அறுதலும் ஈசனை அறிதலும் பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் பெற வுரிய நேர் வழிகளாம். அறிய வுரியதை அறிந்தவன் அடைய வுரியதை விரைந்து அடைந்து உயர்ந்து திகழ்கின்றான்.

அடைய வேண்டியது அடைந்து மேல் துயரம்
அற்று இன்பம் அளவி லாதாய்க்
கடையதாம் தருவிலங்கு பறவைகள் போல்
வீணாள்கள் கழியா தாகித்
தடையிலா மனனத்தால் வாழ்வதே
உயர்வாணாள்; சநநம் தீர்ந்தோர்
உடையபிறப்பு உயர்ந்ததாம்; கிழவேச
ரிப்பிறப்பாம் ஒழிந்த எல்லாம்.

(ஞான வாசிட்டம்)

பின்பு பிறவாமல் செய்து கொண்டவன் பிறப்பே சிறப்பு மிகப் பெற்றது, மற்றப் பிறப்புகள் எல்லாம் கிழக் கழுதைப் பிறப்பே என்று இது இவ்வாறு பழித்துள்ளது. அடைய வேண்டியதை அடைய வில்லையானல் அவன் கடையனாய்க் கழிந்து போகிறான். சிறந்த அறிவுடைய உயர்ந்த மனிதப் பிறப்பைப் பெற்றும் உயிர் துயர் நீங்கி உய்ய உரிய நிலையை எய்த இல்லையானால் அது வெய்ய புலையே. ஆன்மா இன்பமுற அன்பு புரிக.

உரிமையான உள்ளன்புடையவரே உறவினர் என்பதற்கு எவ்வழியும் செவ்விய தகுதியானவர்.