பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அணியறுபது


தருமம் ஆகிய கற்பகதரு அருளுகிற அற்புத இன்பங்களை ஈண்டு அறிந்து கொள்கின்றோம்.

பழகிய நண்பர்கள் பண்புரிமைகள் தோய்ந்து வரும் அளவே அன்புரிமையும் இன்ப நலன்களும் நன்கு அடைய நேர்கின்றனர்.

அடக்கத்தில் எல்லா மேன்மைகளும் அடங்கியிருக்கின்றன. அதனால் அரிய பல நன்மைகள் பெருகி இருமையும் இன்பம் மருவி வருகின்றன.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

(குறள் 121)

மனிதனைத் தேவன் ஆக்கி அடக்கம் இன்ப உலகத்தில் ஏற்றியருளும அடங்காமை எவரையும் இழிவாக்கி நரகதுயரத்தில் வீழ்த்தி விடும் என்னும் இது இங்கே நன்கு சிந்தித்துத் தெளிய வுரியது.

41.உற்ற உருவிற் குணர்வே அணியுழந்து
கற்ற கலைக்குக் கருத்தணியாம்-பெற்றெடுத்த
மக்கட் கணிசால்பு மாண்பமைந்த அன்பே நல்
ஒக்கற் கணியாகும் ஓர்

(சக)

இ_ள்

உணர்வே மனித உருவிற்கு அழகு: கருத்தே கற்ற கலைக்கு அழகு; சால்பே பெற்ற மக்களுக்கு அழகு உள்ளன்பே ஒக்கலுக்கு அழகு என்க.

உணர்ச்சியும் கருத்தும் சால்பும் அன்பும் ஈண்டு உணர வந்துள்ளன. பான்மை படிந்து வரும் அளவே எவையும் எங்கும் மேன்மை அடைந்து வருகின்றன.