பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

109


மனிதப் பிறப்பு பெறுதற்கு அரியது; அவ்வாறு பெற்றாலும் செவ்விய அறிவு செறிந்து வரவில்லை. யானால் அது சிறந்து விளங்காது. மெய்யறிவு மேவி வந்த போதுதான் மெய்யான உயர் பிறப்பாய் அது மேன்மை மிகப் பெறுகின்றது.

மக்கள் உடம்பு பெறற்கரிது; பெற்றபின்
மக்கள் அறியும் அறிவரிது;-மக்கள்
அறிவறிந்தார் என்பார் அறத்தின் வழுவார்;
நெறிதலை நின்றொழுகு வார்.

(அறநெறி212)

அரிய மனித உருவை அடைந்தவர் அடையவுரிய பெருமைகளை இதனால் அறிந்து கொள்கிறோம்.

தருமநெறி தழுவி ஒழுகி வருபவரே விழுமிய மேலோராய் விளங்கி எழுமையும் இன்பம் பெறுகின்றனர். புண்ணிய நீர்மையே எண்ணரிய மகிமைகளை எங்கும் நன்கு அருளி வருகின்றது.

உண்மையாகத் தெளிந்த உணர்வுக்குப் பயன் தன்னுடைய நிலைமைகளை முன்னதாக உன்னியுணர்ந்து தெளிந்து உய்தி பெறுவதேயாம்.

அன்னையின் வயிற்றில இருந்துநாம் இந்த
அரியமெய் அடைந்துவந் துள்ளோம்;
முன்னையூழ் வழியே யாவையும் முடிந்து
மூண்டுவந் துள்ளன; உயிர்கள்
தன்னையும் தன்னுள் இருந்தெலாம் இயக்கும்
தனிமுதல் தலைவனும் தனையும்
உன்னிநேர் அறியும் உணர்வொளி உளதேல்,
உய்தியாம்; இலை எனில் இலையே.